Published : 10 Sep 2019 12:18 PM
Last Updated : 10 Sep 2019 12:18 PM

திமுகவினரே தமிழ்ப் பெயர் வைப்பதில்லை: துரைமுருகன் வேதனை

சென்னை

திமுககாரர்கள் வீட்டிலேயே தமிழ்ப் பெயர் வைக்கப்படாதது வேதனையைத் தருகிறது என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பாலசுப்ரமணியம் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழா சென்னை, அன்பகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துரைமுருகன், ''வெள்ளைக்காரர்கள் வரவில்லை எனில், இந்தியா சோமாலியா போன்ற நாடாக மாறியிருக்கும். பிற மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் தாய்மொழிப் பற்று அவசியம் அதிகம் வேண்டும். திமுககாரர்களின் வீட்டிலேயே தமிழ்ப் பெயர் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒருவர் வீட்டில் மட்டுமல்ல, பலரின் வீட்டிலும்.

தெரிந்த நண்பரிடத்தில் உங்கள் பேத்தியா என்று கேட்டால் ஆம் என்றார். பெயர் என்ன என்று கேட்டால், அனீஷா என்கின்றனர். இன்னொருவரைக் கேட்டால் அவ்ஸ்வீத் என்று சொல்கின்றனர். இந்த நிலைதான் இப்போது இருக்கிறது. இது நிச்சயம் மாற வேண்டும்'' என்றார் துரைமுருகன்.

இவ்விழாவில், திமுக எம்.பி. ஆ.ராசா, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஆ.ராசா பேசும்போது, ''சமயம் சார்ந்த தமிழை, சமத்துவம் சார்ந்த தமிழாக மாற்றியது திராவிடமே. திருக்குறளில் எல்லா சமூகத்திலும் உள்ள ஒழுங்கு முறை குறித்துக் கூறப்பட்டுள்ளதால், திருக்குறளைத் திராவிட இயக்கம் உயர்த்திப் பிடிக்கிறது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x