

திருச்சி
புகழேந்தி விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக முக்கிய நிர்வாகியான புகழேந்தி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ''முகவரி இல்லாமல் 14 வருடங்கள் வெளியே இருந்த டிடிவி தினகரனை ஊருக்குக் காண்பித்தது புகழேந்திதான். உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் ஜெயலலிதா இறக்கும்போது கூட தினகரன் கிடையாது. நாம்தான் போராட்டங்களை மேற்கொண்டுதான் அவரை வெளியே காண்பித்தோம்'' என்று புகழேந்தி தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், அமமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ வெளியானது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய புகழேந்தி, ''கோவையில் நான் கட்சியினருடன் பேசியது உண்மை. ஆனால் அதிருப்தியில் இருந்தவர்களைச் சமாதானப்படுத்தவே அப்படிப் பேசினேன். அதிருப்தி இருக்கிறது என்றால் டிடிவி தினகரனுடன் தனியாகப் பேசுவேன். இதுபோன்று செய்ய மாட்டேன். அமமுகவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தொடர்ந்து நிறையப் பேர் வெளியேறுகிறார்கள். இதைப் பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது'' என்று புகழேந்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து திருச்சியில் இன்று (செப்.10) செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "இதைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். நானும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். யார் மீது தவறு இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லோரும் கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஒரு சிலர் செல்கின்றனர். சுயநலம், தனிப்பட்ட காரணங்களுக்காகச் செல்கின்றனர். அதற்காக என்ன செய்ய முடியும்?
இதனைத் துரோகம் என்று நான் சொல்லவில்லை. இத்தனை நாள் எங்களுடன் இருந்தனர். ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் தீர விசாரித்து எடுக்கப்பட்டவை. அதேபோன்று, இதனையும் தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பேன்," என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.