Published : 10 Sep 2019 11:31 AM
Last Updated : 10 Sep 2019 11:31 AM

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம்: தமிழக மக்களுக்கு நன்மை ஏற்படும் சூழல்; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

முதல்வர் மேற்கொண்ட வெளிநாடுகளின் சுற்றுப்பயணத்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்மை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செப்.10) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பியிருப்பது பாராட்டுக்குரியது.

தமிழக முதல்வர் கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னையிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு 13 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாகச் சென்று 10 ஆம் தேதியான இன்று தமிழகம் திரும்பியிருக்கிறார். தமிழக முதல்வருடன் சென்ற தமிழக அமைச்சர்களும் அங்குள்ள தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, தமிழகத்தில் அவற்றைச் செயல்படுத்த முனைப்புடன் திரும்பியிருப்பதும் தமிழகத்தில் பல தொழில்கள் மேலும் முன்னேற்றம் அடைய வழி வகுக்கும்.

இப்பயணத்தின் போது முதற்கட்டமாக லண்டனில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளைச் சந்தித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து துபாய் சென்று தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்ததும், தொழில் தொடங்குவது சம்பந்தமாக ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீட்டையும் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பயன் தரும். இப்பயணத்தில் பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இப்பயணமானது மருத்துவம், கால்நடைப் பூங்கா, பால் பதப்படுத்துதல், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட பல துறை சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் தொடர்பான முன்னேற்றங்களை அறிந்துகொள்வதற்கும், அந்நிய முதலீட்டைப் பெருக்குவதற்கும் பேருதவியாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் மேற்கொண்ட வெளிநாடுகளின் சுற்றுப்பயணத்தினால் 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருப்பதும், இதன் மூலம் சுமார் 35,520 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதும் நல்ல முயற்சியாகும்.

எனவே தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாடுகளின் பயணம் தமிழகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டை ஈர்க்க வேண்டும், வேலைவாய்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தி தர வேண்டும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் ஆகிய நல்லெண்ண அடிப்படையில் அமையப்பெற்றிருக்கிறது. அதாவது வெளிநாட்டில் நடைபெறும் தொழில்கள், நவீனத் தொழில்நுட்பங்கள், தொழில் முறைகள் ஆகியவற்றை நேரடியாகப் பார்த்து, அறிந்து, தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் அதனைத் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவும் சென்ற முயற்சி தமிழகத்திற்கு உறுதியாக பயன் தரக்கூடிய வாய்ப்பாகும்.

குறிப்பாக தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாடுகளின் பயணத்தின் பயனாக வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவார்கள். அதன் மூலம் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும், தமிழகம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் தொழில் புரிவோர் மத்தியிலும், தமிழ் தொழில் முனைவோர் மத்தியிலும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் தொழில் செய்வதற்கான நல்ல சூழல் உள்ளிட்ட சாதகமான பலவற்றை எடுத்துரைத்ததால் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியிலும், புதிதாகத் தொழில் தொடங்க இருப்பவர்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்பட்டு, அவர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க, முதலீடு செய்ய முன்வருவார்கள்.

எனவே, தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாடுகளின் சுற்றுப்பயணத்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்மை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியிருக்கின்ற முதல்வருக்குப் பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்," என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x