

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்தான் உள்ளோம் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு கட்சியின் ஆட்சி என்ற நிலைமாறி கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆண்டுக்குள் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளை மூட தேசிய அளவில் ஒரு கொள்கையை அமல்படுத்த வேண்டும். மதுக்கடைகளை மூட வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம்தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும். முதற்கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டங்களும் அதன்பின்னர் மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும்.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம்’ என்று திமுக அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இப்பிரச்சினையில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.