Published : 10 Sep 2019 11:14 AM
Last Updated : 10 Sep 2019 11:14 AM

அரசின் பணிகள் முடிந்து விடவில்லை; தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வருவதை உறுதி செய்க: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செப்.10) வெளியிட்ட அறிக்கையில், "இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பயணத்தின் போது, தமிழ்நாட்டில் ரூ.8,830 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த அளவுக்கு முதலீடு திரட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க சாதனையாகும்.

அமெரிக்காவிலும், துபாயிலும் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து தமிழக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொழில்துறையில் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றம் என்பதில் யாருக்கும், எந்த ஐயமும் இல்லை. இவை தவிர லண்டனில் செயல்பட்டு வரும் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் அமைக்க ஒப்பந்தமாகியிருப்பதும் வரவேற்கத்தக்கது. முதலீடுகளைத் திரட்டியதற்காக முதல்வருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவி வரும் சூழலில் முதல்வரின் பயணத்தில் ரூ.8830 கோடிக்கு முதலீடுகள் திரட்டப்பட்டிருப்பதும், அதன்மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள். இவை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்பது உறுதி. அந்த வகையில் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழக முதல்வரின் 3 நாடுகள் பயணம் நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது.

எனினும் அரசின் பணிகள் இத்துடன் முடிவடைந்து விடவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவை தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தொழில் தொடங்குவதற்கு சாதகமாக தமிழகத்தில் உள்ள அம்சங்களை சந்தைப்படுத்தி அதன் மூலம் உலக அரங்கிலிருந்து கணிசமான அளவில் தொழில் முதலீடுகளைத் திரட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x