Published : 10 Sep 2019 09:45 AM
Last Updated : 10 Sep 2019 09:45 AM

கடலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

டெங்குவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கும் கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் 

டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழையால் மக்கள் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த சிலருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஹரிஹரன் (19), நெல்லிக்குப்பம் துரைசாமி மகன் நவீன் (17), அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மகன் காந்திராஜ் (17), சிதம்பரம் அருகே சி.வாக்காரமாரி கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி கல்யாணி (53), பண்ருட்டி மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பார்த்திபன் (17), பண்ருட்டி அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் கோபிநாத் (14), நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த ராமானுஜம் மகன் மோகன்தாஸ் (31) ஆகிய 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் இருவர் நலமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து 7 பேருக்கும் டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கடலூர் இணை இயக்குநர் (குடும்ப நலப் பணிகள்) ரமேஷ்பாபு கூறுகையில், டெங்கு பாதிப்பில் உள்ள 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் என்றார்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கீதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x