Published : 10 Sep 2019 09:35 AM
Last Updated : 10 Sep 2019 09:35 AM

கால்நடைத் தீவனங்கள் விலை உயர்வு!- கதறும் பால் உற்பத்தியாளர்கள்

ஆர்.கிருஷ்ணகுமார்

பால் கொள்முதல் விலை உயர்ந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை; அதற்குள்ளாகவே கால்நடைத் தீவனங்களின் விலையை உயர்த்தி விட்டார்கள். விவசாயிகளும், பால் உற்பத்தியாளர்களும் கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொள்ளக்கூட வாய்ப்புத் தரப்படுவதில்லை. கால்நடைத் தீவனங்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்தால்தான், கொள்முதல் விலை உயர்வு கொஞ்சமாவது பயனளிக்கும் என்று கதறுகின்றனர் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும்.

பயிர் சாகுபடியில் போதுமான வருவாய் கிடைக்காத நிலையில், உப தொழிலாள கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விஷயம். தண்ணீர் பாட்டிலைக் காட்டிலும் பாலுக்கு குறைந்த விலைதான் கிடைக்கிறது என்று கதறி வந்த விவசாயிகள், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், மாட்டுப்பால் விலையை லிட்டர் ரூ.28-லிருந்து ரூ.32-ஆகவும், எருமைப்பால் விலையை ரூ.35-லிருந்து ரூ.41-ஆகவும் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இது விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது. “இந்த மகிழ்ச்சி ஒரு மாதம்கூட நீடிக்கவில்லை. கால்நடைத் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது” என்று வேதனை தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.

இதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில், துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமி, நிர்வாகிகள் ஒன்னிபாளையம் பி.மருதாசலம், வாகை பழனிசாமி, எஸ்.சண்முகம், குழந்தைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, பட்டாணி குருணை ஆகியவற்றுடன் நடத்திய இப்போராட்டம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

இது தொடர்பாக சங்கத் தலைவர் சு.பழனிசாமி, துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமியிடம் பேசினோம். “கடந்த மாதம் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர்த்தியது. ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு ரூ.4 விலை அதிகமாக கிடைத்தாலும், தனியார் ரூ.2 மட்டுமே அதிகம் தருகின்றனர். அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களில் விவசாயிகளிடம் பால் வாங்கும் சில தனியார் வியாபாரிகள், கொள்முதல் விலை உயர்வைக் கண்டுகொள்ளாமல், பழைய விலையையே கொடுத்து வருகின்றனர்.

புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, பருத்தி விதை புண்ணாக்கு, நெல் தவிடு, நயன் தவிடு, மக்காச்சோளம், கோதுமை மாவு, பட்டாணி குருணை, உளுந்து குருணை போன்றவை, கறவை மாடுகளுக்கு அடர் தீவனங்களாக வழங்கப்படுகின்றன. பால் விலை உயர்த்தப்பட்ட உடனேயே இவற்றின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.

50 கிலோ கொண்ட கடலைப் புண்ணாக்கு ரூ.1,750-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.2,250-க்கு விற்கப்படுகிறது. இதேபோல, பருத்தி விதை புண்ணாக்கு (60 கிலோ) மூட்டை ரூ.1,800-லிருந்து, ரூ.2,170-ஆகவும், மக்காச்சோளம் மாவு (40 கிலோ) மூட்டை ரூ.1,400-லிருந்து ரூ.1,560-ஆகவும், நெல் தவிடு (50 கிலோ) மூட்டை ரூ.600-லிருந்து ரூ.680-ஆகவும், நெல் நயன் தவிடு (50 கிலோ) மூட்டை ரூ.750-லிரு்து ரூ.1,000-ஆகவும், கோதுமை மாவு (50 கிலோ) ரூ.1,200-லிருந்து ரூ.1,400-ஆகவும், பட்டாணி குருணை (50 கிலோ) மூட்டை ரூ.1,100-லிருந்து ரூ.1,400-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அடர் தீவனங்கள் விலை உயர்வு, கூலி ஆட்களுக்கான சம்பள உயர்வு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மாட்டுப்பால் லிட்டருக்கு ரூ.40, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.60 என விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கொள்முதல் விலையை குறைந்த அளவு மட்டுமே உயர்த்திய நிலையில், அடர் தீவனங்களின் விலை உயர்ந்தது, எங்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து விவசாயிகள், கால்நடை வளர்ப்போரைப் பாதுகாக்கும் வகையில், அடர் தீவனங்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில், கூட்டுறவு நிறுவனம் மூலம் அடர் தீவனங்களை வழங்குவதைப்போல, தமிழகத்திலும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் அடர்தீவனங்களை, நியாயமான விலையில், மானியத்துடன் வழங்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x