Published : 10 Sep 2019 09:24 am

Updated : 10 Sep 2019 09:24 am

 

Published : 10 Sep 2019 09:24 AM
Last Updated : 10 Sep 2019 09:24 AM

இனிக்கும் பேரீச்சை!- அசத்தும் பொள்ளாச்சி விவசாயி

date-fruits

எஸ்.கோபு

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல், தேங்காய் மற்றும் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காதது என பல்வேறு பாதிப்புகளுக்கு தென்னை விவசாயிகள் உள்ளாகும் நிலையில், அதற்கு மாற்றாக, பேரீட்சை சாகுபடியில் ஈடுபட்டு, பிற விவசாயிகளுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயி கல்யாணசாமி.

வெப்பம் மிகுந்த, வறட்சியான பாலைவனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வந்த பேரீச்சை மரங்களை, பொள்ளாச்சி அருகே ஜக்கார்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் 4 ஏக்கரில் பயிரிட்டுள்ளார். சவுதிஅரேபியாவை சேர்ந்த, மஞ்சள் நிறமும், இனிப்பு சுவையும் அதிகமுள்ள ‘பர்ரி’ ரக பேரீட்சையை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பயிரிட்டு, தற்போது அதிக மகசூல் எடுத்து, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அசத்தி வரும் விவசாயி கல்யாணசாமியிடம் பேசினோம்.
“பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்றாலும், நோய் தாக்குதல், உரிய விலை கிடைக்காதது, தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றால் மாற்று விவசாயத்தை நாடும் சூழல் உருவானது. வறட்சியான பகுதியில் சாகுபடியாகும் பேரீட்சை, இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் மட்டுமின்றி, தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும், சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுவதை அறிந்தேன். நான்கு ஏக்கரில் பேரீட்சை சாகுபடி செய்வதற்கான நாற்றுகளை துபாயில் இருந்து கொள்முதல் செய்தேன். அப்போது ஒரு நாற்றின் விலை ரூ.3,500. மணல், செம்மண் மற்றும் தொழு உரத்தைக் கலந்து, இரண்டரை ஆழத்தில் பேரீச்சை நாற்று நடவு செய்து, சொட்டுநீர்ப் பாசன வசதி செய்துள்ளேன். நடவு செய்த மூன்றாவது ஆண்டில் பூக்கள் விடத் தொடங்கி, காய்ப்புத்திறனை அடைந்தது. ஆறாம் ஆண்டு முதல் முழு அளவில் அறுவடைக்கு தயாரானது. பேரீச்சை மரம் 75 ஆண்டுகளுக்குமேல் விளைச்சல் தரக்கூடியது. ஆனால் 45, ஆண்டுகளுக்கு பிறகு விளைச்சல் குறையத் தொடங்கும்.

ஏக்கருக்கு 70 மரங்கள் வீதம் 4 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நாற்றுகளுக்கு தேவையான உரமும், ஊட்டம் அளிக்க இயற்கை மருந்தும் அளிக்கப்படுகிறது. மேலும், அவ்வப்போது பேரீச்சை மரங்களைத் தாக்கும் சிவப்பு கூன்வண்டை அழிக்கவும் மருந்து செலுத்தப்படுகிறது.

பேரீட்சை ஆண்டுக்கு ஒருமுறை சாகுபடி என்பதால், பூக்கும் நாளில் இருந்து, பிஞ்சு உருவாகும் காலம் வரை முறையாக தண்ணீர் பாசனம் மேற்கொண்டால் அதிக விளைச்சல் கிடைக்கும். தற்போது வாரம் ஒருமுறை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. பேரீட்சையில் கிருமி தாக்குதல் மற்றும் மயில், வவ்வால் ஆகியவற்றாலும் பாதிப்பு உண்டு. இதை தடுக்க, காய் பிடிக்கும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, அறுவடைக் காலமான ஆகஸ்ட் மாதம் வரை நான்கு மாதங்கள் பேரீச்சை குலைகளை பாலித்தீன் கவர் மற்றும் கொசுவலையால் மூடி பாதுகாக்க வேண்டும்.

ஒரு மரத்தில் அதிக பட்சமாக 20 முதல் 24 குலைகள்வரை பிடிக்கும். தற்போது 15 குலைகள் பிடித்துள்ளன. ஒவ்வொரு குலையிலும் 15 கிலோ பேரீட்சை காய்கள் கிடைக்கும். ஒரு மாதத்தில் 75 முதல் 125 கிலோ வரை கிடைக்கும் என்பதால், ஏக்கருக்கு 9 ஆயிரம் கிலோ வரை மகசூல் இருக்கும்.

தற்போது 2,000 பேரீட்சை குலைகள் காய்த்துள்ளன. இதன் மூலம் 28 முதல் 30 டன் வரை பேரீட்சை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பேரீச்சை அறுவடை சீசன் முடிந்துவிட்டது. தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் அறுவடை தொடங்கும் என்பதால் விலையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.150 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதைக் கணக்கிட்டு, நான்கு ஏக்கரில் விளையும் பேரீட்சையை மொத்த வியாபாரிகளுக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளேன். கடந்த ஆண்டு இங்கிருந்து திருச்சி, சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், இலங்கை, அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இங்கு விளையும் பேரீச்சைக்கு வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதால், தோட்டத்துக்கே நேரில் வந்து சிலர் வாங்கிச் செல்கின்றனர்.

நடப்பாண்டு கோவை மற்றும் ஈரோட்டிலிருந்து வியாபாரிகள் வந்து, நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.
பேரீச்சம் பழத்தின் சதைப் பகுதியில் 648 மில்லிகிராம் பொட்டாசியம், 59 மில்லிகிராம் கால்சியம், 1.3 மில்லிகிராம் இரும்புச்சத்து ,0.50 சதவீதம் வரை கொழுப்புச்சத்து, பெக்டின் மற்றும் நார்ச் சத்துகள் உள்ளன. பேரீச்சை பழம் ரத்த அணுக்களை அதிகரித்து, ரத்த சோகையை நீக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. ஒவ்வொரு பழமும் 20-70 கலோரி சக்தியைக் கொண்டிருப்பதால், மக்களிடையே பேரீச்சை பழத்தின் நுகர்வும் அதிகரித்துள்ளது” என்றார்.


இனிக்கும் பேரீச்சைபொள்ளாச்சி விவசாயி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author