Published : 10 Sep 2019 07:56 AM
Last Updated : 10 Sep 2019 07:56 AM

தமிழ்வழி பொறியியல் படிப்புக்கான இடங்களை பாதியாக குறைக்க அண்ணா பல்கலை. முடிவு: மாணவர்கள் ஆர்வம் காட்டினால் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

சென்னை

தமிழ்வழி பொறியியல் படிப்புக் கான இடங்களை பாதியாக குறைக்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் வரும் காலத்தில் மாணவர்கள் ஆர்வம் காட்டினால் தமிழ் வழி படிப்பு இடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொறியியல் படிப்பை தமிழில் கற்றுத்தரும் நோக்கத்தில் 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தமிழ்வழி பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல் கட்டமாக இயந்திரவியல் பொறியியல் மற்றும் கட்டிடவியல் பொறியியல் பாடப்பிரிவுகள் தமிழில் தொடங்கப்பட்டன.

ஆனால், வேலைவாய்ப்பின்மை உட்பட பல காரணங்களால் தமிழ்வழி பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. இதனால் தமிழ் பொறியியல் படிப்பு இடங் களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அண்ணா பல் கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தின் 12 உறுப்புக் கல்லூரிகள், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மட்டும் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பிஇ இயந்திரவியல், பிஇ கட்டிட வியல் படிப்புகளுக்கு 1,300 இடங் கள் வரை உள்ளன. தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு அரசு வேலை களில் முன்னுரிமை அளிக்கப்படு வதால் ஆரம்பத்தில் பலர் ஆர்வத் துடன் சேர்ந்தனர். அதன்பின் வேலைவாய்ப்பில் மந்தநிலை ஏற் பட்டதும் மாணவர்கள் தமிழ்வழி படிப்பில் சேர தயக்கம் காட்டு கின்றனர். நடப்பு ஆண்டில் 100-க்கும் குறைவானவர்களே தமிழ்வழியில் சேர்ந்துள்ளனர்.

அதிகபட்சமாக திருச்சி உறுப் புக் கல்லூரியில் மட்டுமே 40 பேர் சேர்ந்துள்ளனர். மற்ற கல்லூரி களில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. ஆரணி, அரியலூர் உட்பட சில கல்லூரிகளில் ஒருவர்கூட சேர வில்லை. இதனால் சுமார் 1,100 இடங் கள் வரை காலியாக உள்ளன.

இதையடுத்து சேர்க்கை இடங் கள் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. ஒருவரும் சேராத கல்லூரி களில் தற்காலிகமாக படிப்பை நிறுத்தி வைக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் மாணவர்கள் ஆர்வம் காட்டினால் தமிழ் வழி படிப்பு இடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்படும் என்றனர்.

இதுவரை 2,800 பேர் வரை தமிழில் பொறியியல் படித்து வெளியேறியுள்ள நிலையில், சுமார் 600 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாகவும், அவர்களில் 200 பேர் மட்டுமே பொறியியல் தகுதிக்குரிய பணி யில் இருப்பதாகவும் கூறப்படு கிறது.

இதுதொடர்பாக தமிழ்வழி யில் பொறியியல் படித்த மாண வர்கள் சிலர் கூறும்போது, ‘‘வேலை வாய்ப்பு இல்லாததால் படித்து முடித்து பலர் வெவ்வேறு துறை களில் பணிபுரிகிறோம். கிண்டி கல்லூரி தவிர்த்து இதர உறுப்பு கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வளாக தேர்வு நடத்தப்படுவதில்லை. இதனால் உறுப்புக் கல்லூரிகளில் படித்தவர்களில் 85 சதவீதம் பேர் வேலையின்றி தவிப்பில் உள்ளனர். எங்களின் பணிவாய்ப்புக்கு அரசு உதவ வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x