

காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு அருகே மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற மாணவர் ஒலிம்பிக் தீப்பந்தம் திடீரென உடலில் தீப்பற்றியதால் மாணவர் எரிந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் ராமகிருஷ்ணா மடத்துக்கு சொந்தமாக பள்ளிகள் இயக்கப்படுகிறது. இதில் மேல்நிலை, உயர்நிலை, பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள் கடந்த மாதம் 30-ம் தேதி நடத்தப்பட்டன.
போட்டியின் தொடக்கத்தில் ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு மைதானத்தை சுற்றி ஓட்டமாக எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஜோதியை விளையாட்டுப்போட்டியில் சிறந்த மாணவர் ஒருவர் ஏந்தி மைதானத்தைச் சுற்றி ஓடிவந்து ஏற்றுவார். அதன்படி ராமகிருஷ்ணா பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் விக்னேஷ் என்ற மாணவர் ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கொண்டு ஓடினார்.
அப்போது, அந்த ஜோதியில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் காற்றின் வேகத்தில் சிதறி ஜோதி எதிர்பாராத விதமாக திடீரென பரவி மாணவர் உடலில் இருந்த பெட்ரோல் காரணமாக பற்றியதாக கூறப்படுகிறது. இதில் மாணவர் உடலில் பற்றிய தீயை அணைக்க உபகரணம் எதுவும் இல்லாத நிலையில் மாணவர் விக்னேஷின் மார்பு மற்றும் முகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.
உடனடியாக மாணவர் விக்னேஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மரணமடைந்தார்.
விளையாட்டு போட்டியில், பாதுகாப்பற்ற முறையில் ஒலிம்பிக் ஜோதியை தயார் செய்ததும், அதில் மண்ணெண்ணெய்க்கு பதில் பெட்ரோலை உபயோகப்படுத்தியதும், பெட்ரோல் கசிந்து வெளியேறும் வகையில் இருந்ததும், மாணவருக்கு போதிய பயிற்சி அளிக்காமல் ஓடவிட்டதும் விபத்துக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மாணவர் தீக்காயம் பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் யாரும் முறையாக அணுகவில்லை என பெற்றோர் தரபிலும் உறவினர்கள் தரப்பிலும் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், 3 நாள் தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது.