Published : 09 Sep 2019 07:33 PM
Last Updated : 09 Sep 2019 07:33 PM

வடகிழக்குப் பருவமழை சிறப்பாக இருக்க வாய்ப்பு; இன்று முதல் 21-ம் தேதி வரை மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னை,

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் தொடங்க இருக்கும் வடகிழக்குப் பருவமழை குறித்தும், நாளை முதல் வெப்பச்சலன மழை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். மேலும், எல்நினோ, மொடோக்கி, லாநினா என்றால் என்ன என்பது குறித்தும் அவர் எளிய முறையில் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது:

''எல்நினோ, லாநினோ, நடுநிலையான காலநிலை ஆகியவை குறித்து சாமானிய மக்களும் புரியும்படி எளிய முறையில் விளக்கியுள்ளேன். சில புகைப்படங்களும் தந்துள்ளேன். உலக காலநிலையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கூறியுள்ளேன்.

பசிபிக் பெருங்கடலில் பெரு கடற்பகுதியில் கடல் நீரின் வெப்பம் இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருந்தால், அதற்குப் பெயர் எல்நினோ. இயல்பைக் காட்டிலும் குளிர்ச்சியாக இருந்தால் லாநினா. இயல்பான நிலையில் இருந்தால் என்சோ நியூரல் என்று பெயர்.

நினோ பட்டியலில் 3 மாத சராசரி 3.4 புள்ளிகளுக்கு மேல் கூடுதலாக 0.5 புள்ளிகள் சென்றால் அந்த ஆண்டு எல்நினோ ஆண்டு என்றும் 0.5 புள்ளிகளுக்குக் கீழ் சென்றால் அதை லாநினோ என்றும் அழைக்கிறோம். 1982, 1997, 2015 ஆகிய ஆண்டுகளில் வரலாற்றில் வலிமையான எல்நினோ ஆண்டுகளாகும். பட்டியலில் நீலவண்ணத்தில் இருக்கும் ஆண்டுகள் லாநினா ஆண்டுகளாகும்.

எல்நினோ வழக்கமாக 4 முதல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். 2002, 2006, 2009 ஆகிய ஆண்டுகள் மிதமான எல்நினோ ஆண்டுகள். இதற்கும் உலக வெப்பமயமாதலுக்கும், அதன் சுழற்சிக்கும் தொடர்பில்லை.

லாநினா என்பது எல்நினோவுக்கு எதிரானது. அதாவது குளிர்ச்சியாக இருக்கும் லாநினாவில் கடலின் வெப்பநிலையில் 3.5 புள்ளிகளுக்கும் -0.5 புள்ளிகள் குறைந்தால் அது லாநினா. மொடோக்கி என்பது எல்நினா மாதிரி அல்ல. ஆனால், பசிபிக் பெருங்கடலில் பெரு அருகே கடற்பகுதி குளிர்ச்சியாக இருக்கும். அதிலும் குறிப்பாக மத்திய பசிபிக் கடலில் கடலின் வெப்பநிலை இயல்பைக் காட்டிலும் வெப்பமாக இருக்கும். இதற்கான புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்.

எல்நினோவின் தாக்கங்கள்

புகைப்படத்தில் எல்நினோ ஆண்டுகளில் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் எந்தெந்தப் பகுதிகள் அதிக மழைப்பொழிவும், குறைந்த மழைப்பொழிவும் இருந்தது குறித்து தகவல் தரப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு எல்நினோ ஆண்டு. அந்த ஆண்டில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சிறப்பாக இருந்தது.

‘லாநினா’ தாக்கங்கள்

தென்மேற்குப் பருவமழைக்கு ‘லாநினா’ வரலாற்று ரீதியாகவே நல்லது. ஆனால், 2016-ம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்பட்ட ‘லாநினா’வின் போது தமிழகத்துக்கு மழை குறைந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்தியப்பெருங்கடல் பகுதியில் மாற்றங்கள்

ஆப்பிரிக்கா பகுதியை நோக்கி வெப்பமான நீர் திசைமாறும். இதன் காரணமாக இந்தியப் பெருங்கடல் முழுமையும் இந்தோனேசியாவுக்கு கிழக்கே வெப்பநிலையில் இயல்பைக் காட்டிலும் கடல் குளிர்ச்சி அடையும். ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் கடல் நீர் இயல்பைக் காட்டிலும் அதிக வெப்பமடையும்.

எதிர்விளைவு தரும் ஐஓடி:

வெதுவெதுப்பான நீர் இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்பகுதியில் சேரும். இதன் காரணமாக இந்தோனேசிய கிழக்குக் கடற்பகுதியில் கடல்நீர் இயல்பைக் காட்டிலும் வெப்பமடையும். ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் கடல்நீர் இயல்பைக் காட்டிலும் குளிர்ச்சி அடையும்.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை நடுநிலையான என்சோ மற்றும் மொடோக்கியுடன் குறிப்பாக சாதகமான இந்தியக் கடற்பகுதி டைபோலுடன்(ஐஓடி) இருக்கும். வழக்கமாக சாதகமான ஐஓடி என்பது எல்நினோ ஆண்டு அல்லது மொடோக்கி ஆண்டில் இருக்கும். அதேசமயம், லாநினா மற்றும் சாதகமான ஐஓடி சேர்ந்து வருவது அரிது. ஆதலால், சாதகமான ஐஓடி மற்றும் எல்நினோ மற்றும் மொடோக்கி எல்நினோ சேர்ந்து வந்த ஆண்டுகளில் மழை சிறப்பாக இருந்துள்ளது. அப்படியென்றால் இந்த ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

2019- சாதகமான ஐஓடி மற்றும் எல்நினோ மொடோக்கி

2015- வலிமையான ஐஓடி ஆண்டு- தமிழகத்தில் சிறப்பான மிதமிஞ்சிய மழை காணப்பட்டது. வலிமையான எல்நினோ ஆண்டு.
2009- வலிமையிழந்த ஐஓடி ஆண்டு- தமிழகத்தில் கூடுதல் மழை, சென்னையில் இயல்பைக் காட்டிலும் சிறிது அதிகமான மழை. (எல்நினோ மொடோக்கி ஆண்டு)

2006- சாகமான ஐஓடி ஆண்டு- தமிழகத்தில் கூடுதல் மழை, சென்னையில் இயல்பைக் காட்டிலும் சற்று கூடுதல் மழை (மிதமான எல்நினோ ஆண்டு)

2002- சாதகமான ஐஓடி ஆண்டு- தமிழகத்தில் இயல்புக்கும் குறைந்த மழை, சென்னையில் கூடுதல் மழை (எல்நினோ மொடோக்கி ஆண்டு)

1997-வலிமையான சாதகமான ஐஓடி ஆண்டு-தமிழக்தில் கூடுதலாக மிதமிஞ்சி மழை, சென்னையிலும் மிதமிஞ்சிய மழை (வலிமையான எல்நினோ ஆண்டு)

1994-வலிமையான சாதகமான ஐஓடிஆண்டு- தமிழகத்திலும், சென்னையிலும் கூடுதல் மழை (எல்நினோ மொடோக்கி ஆண்டு)

1991- சாதகமான ஐஓடி ஆண்டு- தமிழகத்தில் சற்றே கூடுதல் மழை, சென்னையில் இயல்பான மழை (எல்நினோ மொடோக்கி ஆண்டு)
1987- சாதகமான ஐஓடி ஆண்டு-தமிழகத்தில் கூடுதல் மழை மற்றும் சென்னைக்கு இயல்பைக் காட்டிலும் சற்று கூடுதல் மழை (எல்நினோ ஆண்டு)
1982- வலிமையான சாதகமான ஐஓடிஆண்டு- தமிழகத்தில் இயல்பைக் காட்டிலும் குறைந்த மழை, சென்னையில் பற்றாக்குறை மழை (வலிமையான எல்நினோ ஆண்டு)
1977- சாதகமான ஐஓடி ஆண்டு, தமிழகத்தில் கூடுதலாக மிதமிஞ்சிய மழை, சென்னையில் இயல்பைக் காட்டிலும் குறைந்த மழை (எல்நினோ மொடோக்கி ஆண்டு)
1976-சாதகமான ஐஓடி ஆண்டு, தமிழகத்தில் இயல்பைக் காட்டிலும் சற்றே கூடுதல் மழை, சென்னையில் கூடுதல் மழை (மிதமான எல்நினோ ஆண்டு)
1972- வலிமையான சாதகமான ஐஓடி ஆண்டு- தமிழகத்தில் கூடுதல் மழை, சென்னையிலும் கூடுதல் மழை (வலிமையான எல்நினோ ஆண்டு)
1967- சாதகமான ஐஓடி ஆண்டு- தமிழகத்தில் கூடுதல் மழை, சென்னையில் பற்றாக்குறை மழை (எல்நினோ மொடோக்கி ஆண்டு)

1963-சாதகமான ஐஓடி ஆண்டு, தமிழகத்தில் கூடுதல் மழை மற்றும் சென்னையில் இயல்பான மழை (எல்நினோ மொடோக்கி ஆண்டு)

முடிவு:

முழுமையான எல்நினோவைத் தவிர்த்துவிடுங்கள். சாதகமான ஐஓடி மற்றும் மொடோக்கி ஆண்டு 2009, 2006, 1994, 1977, 1963 ஆண்டுகளைப் பார்க்கவும். இந்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு இந்த ஆண்டு வடகிழக்குப் பருமழை எவ்வாறு இருக்கும் என யூகித்துக்கொள்ள முடியும்.

பெரும்பாலான சாதகமான ஐஓடி ஆண்டுகளில் வடகிழக்குப் பருமழை என்பது குறித்த காலத்திலும் அல்லது முன்கூட்டியே தொடங்கிவிடும். இந்த ஆண்டு சரியான காலத்திலும் அதாவது அக்டோபர் மாத நடுப்பகுதியில் தொடங்க வாய்ப்புள்ளது.

செப்டம்பர் மழை

தமிழகத்தில் வெப்பச்சலன மழை இன்று முதல் தொடங்கி வரும் 21-ம் தேதி வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வடகிழக்கு மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களில் நல்ல மழை மாலை நேரத்தில் அல்லது இரவு நேரத்தில் பெய்யக்கூடும். மதுரை மண்டலம், தூத்துக்குடி மண்டலத்தில்கூட மழை பெய்யக்கூடும்''.

இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x