

சபரிமலை
ஓணம் பண்டிகைக்காக இன்று (திங்கள்கிழமை) மாலை சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டது.
தமிழகம், கேரள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசிநாள் நடை திறக்கப்படுவது வழக்கம். அன்று மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு ஐயப்பன் மீது சாத்தப்பட்டிருக்கும் விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பின்பு அடுத்தடுத்த நாட்களில் சிறப்புபூஜை, அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
இதுதவிர பங்குனி உத்திரம், உத்திரம் ஆராட்டு, விஷூ, பிரதிஷ்டை தினம், சித்திரை ஆட்ட திருநாள், மண்டல கால பூஜை உள்ளிட்ட வழிபாடுகளுக்காகவும் கோயில் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இதன்படி ஓணம் பண்டிகைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ்மேக்னரு முன்னிலையில் தந்திரி வாசுதேவன் நம்பூதிரி சிறப்பு வழிபாடுகள் செய்து நடைதிறந்து வைத்தார்.
நடைதிறப்பைக் காண நேற்று கேரளா, தமிழகம் பகுதி பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். சுவாமியே சரணம் ஐயப்பா என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி பிரசாரம் வழங்கப்பட்டது.
தொடர் நிகழ்வாக நாளை காலை 5 மணி முதல் நெய்அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். பின்பு 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் ஓண விருந்து கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. பல்வேறு காய்கறிகளுடன் சிறப்பு உபசரிப்பாக இந்த அன்னதானம் இருக்கும்.
வரும் 13ம் தேதி வரை தினமும் இந்த விருந்து அனைவருக்கும் வழங்கப்படும். பின்பு அன்று மாலை 5 மணிக்கு நடைசாத்தப்படும்.
அடுத்ததாக புரட்டாசி மாதத்திற்கான நடைதிறப்பு வரும் 16ம் தேதி மாலை 5.30மணிக்கு நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.