மழைக்காலங்களில் நிவாரண உதவி வழங்க வேண்டும்: கனிமொழியிடம் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை

மழைக்காலங்களில் நிவாரண உதவி வழங்க வேண்டும்: கனிமொழியிடம் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை

Published on

தூத்துக்குடி,

மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதுபோல், மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

உப்பளத் தொழிலாளர்கள் தங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இன்று தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யா நகர் பகுதிகளில் உள்ள உப்பளத்திற்கு நேரடியாகச் சென்று கனிமொழி எம்.பி. அங்குள்ள தொழிலாளர்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அந்தத் தொழிலாளர்கள், மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது போல் தங்களுக்கும் மழைக்காலங்களில் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி .செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உப்பளத் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். திமுக ஆட்சி வந்தவுடன் இவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உப்பளத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்'' என அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in