Published : 09 Sep 2019 03:12 PM
Last Updated : 09 Sep 2019 03:12 PM

இலவச அரிசி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய பாஜக: தலைமைச் செயலர் ஒரு வாரத்தில் அறிக்கை தர கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி

இலவச அரிசி விநியோகத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று பாஜகவினர் ராஜ்நிவாஸ் சென்று கிரண்பேடியிடம் மனு தந்தனர். இம்மனுவை தலைமைச் செயலகம் அனுப்பி, ஒரு வாரத்தில் இதுதொடர்பான புகார்கள் அனைத்துக்கும் பதில் தரும் வகையில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலருக்கு கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

இலவச அரிசி தர புதுச்சேரி அரசும், அதற்கான பணத்தை பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தவும் ஆளுநர் கிரண்பேடியும் வலியுறுத்தி வரும் சூழலில், பாஜகவினர் மாநிலத் தலைவரும் நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன் தலைமையில் இன்று (செப்.9) ராஜ்நிவாஸ் சென்று கிரண்பேடியைச் சந்தித்தனர். அவருடன் நியமன எம்எல்ஏக்கள் சங்கர், செல்வகணபதி மற்றும் பாஜக நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

இலவச அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் பணம் தரவும், இலவச அரிசி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்றும் கோரினர். இலவச அரிசி விவகாரம் தொடர்பாக அடுக்கடுக்காக அரசு மீது புகார்களையும் எழுத்துப்பூர்வமாகத் தந்தனர். மனு தந்தோரிடம் கையெழுத்துடன் செல்போன் எண்களையும் எழுதித் தரும்படி கிரண்பேடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து இம்மனுவை தலைமைச் செயலருக்கு அனுப்பி வைத்தார்.

பாஜகவினர் மனு தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், "பாஜக நிர்வாகிகள் மனு தந்தனர். அதில் போலி ரேஷன் கார்டுகள், முறையான அரிசி விநியோகக் கணக்கு இல்லாதது, ரேஷன் கடைகள் இயங்கி வரும் சூழல் மற்றும் அரிசி விநியோகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாதது தொடர்பாக புகார் தெரிவித்தனர். அத்துடன் கடந்த கால முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். இதை சிபிஐ விசாரிக்கவும் வலியுறுத்தினர்.

பழைய ஒப்பந்ததாரர்கள் மீதான வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள விவரம் மட்டுமல்லாமல் இப்புகார் மனுவை தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ளேன். இப்புகார்கள் அனைத்துக்கும் பதில் விவரங்களுடன், ஒரு வாரத்துக்குள் அறிக்கை தரவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x