Published : 09 Sep 2019 02:09 PM
Last Updated : 09 Sep 2019 02:09 PM

என் மாநிலத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று சொன்னேன்; கீழ்த்தரமாக நடத்தினார்கள்: கையை அறுத்துக்கொண்டது குறித்து மதுமிதா பேட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை மிகவும் தரக்குறைவாக நடத்தியதாகவும், தவறைச் சுட்டிக்காட்டியபோது மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள் என்றும் மதுமிதா பேட்டி அளித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது பிக் பாஸ் நிர்வாகம் புகார் அளித்தது. பின்னர் மதுமிதாவும் போலீஸில் புகார் அளித்தார்.

இந்நிலையில் மதுமிதா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டி:

உங்களால் என்ன பிரச்சினை ஏற்பட்டது?

நான் பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதையும் செய்யவில்லை. எனக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில்தான் நான் பேசினேனே தவிர, வேறு உள் நோக்கம் எதுவும் இல்லை.

தற்கொலை முயற்சி என்று சொல்வதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஒரு 8 பேர் சேர்ந்து துன்புறுத்துகிறார்கள். கேங் ராகிங் செய்கிறார்கள். அதை எதற்காகச் செய்கிறார்கள். என் மாநிலத்தில் நடக்கும் விஷயத்தைச் சொல்லும்போது நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள். நீங்களும் இந்த ஊரில்தானே இருக்கிறீர்கள்.

நீயும் இதே ஊரில்தான் இருக்கிறாய், எங்கே போனது உன் உணர்வு. இதை ஆதரிக்க வேண்டாம். ஆனால், குறைந்தபட்சம் இதைப்பற்றி பேசியவர்களை கீழ்த்தரமாக இழிவுபடுத்தாமல் இருந்திருக்கலாம் அல்லவா? அந்த உணர்வுக்காக வெளிப்பட்டதுதான் அந்த நிகழ்வு.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து உங்கள் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, உங்களை தனியாக நடத்துகிறார்கள் என்பது. அதன் பின்னணியாக என்ன நினைக்கிறீர்கள்?

தைரியமாக இருப்பதுதான் அந்தப் பின்னணி என்று நினைக்கிறேன். பிக் பாஸில் நான் உள்ளே நுழைந்த இரண்டாம் நாள் அவர்கள் வெளியிட்ட செய்தி இதுபொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. சமூக சிந்தனை, சமூக உணர்வுள்ள நிகழ்ச்சி என்றார்கள்.

அப்படியானால் அந்த 16 பேருக்கும் அது இருக்கவேண்டும் அல்லவா? உங்கள் வீட்டில் உங்களுக்கு அது இருக்காது, ஆனால் பொது இடத்தில் பொது நிகழ்ச்சியில் வரவேண்டும் அல்லவா? அந்த இடத்தில் பொது சிந்தனையோ, சமூக உணர்வோ இல்லையே. குறைந்தபட்சம் தன் குடும்பம் குறித்த அக்கறையோ ஏன் பெற்றோர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்கிற அக்கறைகூட இல்லை.

நான் அவர்களிடம் சொன்னது, சமூகத்துக்கு நீங்கள் நல்லது செய்யாவிட்டாலும் குமுறலை உருவாக்காதீர்கள். குடும்பத்தோடு நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். இதைப் பார்ப்பதன் மூலமாக என தட்டிக்கேட்டதற்கு, தைரியமாகச் சொன்னதற்கு கிடைத்த பரிசுதான் அது.

தமிழ்ப் பெண் வாதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் கமல்ஹாசன் தவிர வேறு யாரும் ஆட்சேபம் தெரிவித்தார்களா?

இந்த விவகாரத்தில் கமல் சார் எதுவும் சொல்லவில்லை. பெரிதும் சப்போர்ட் செய்தார். ஆனால் சிலபேர் உத்தி என்று சொன்னார்கள். அங்கு சிலரின் நடத்தை பிடிக்கவில்லை. அதை நான் தமிழ்நாட்டுப் பெண், தமிழ்நாடு என்று சொல்லவில்லை. எனக்கு இது பிடிக்கவில்லை, இப்படி நடக்காதீர்கள் என்றேன். ஆனால் அதைப் பெரிதாக்கினார்கள்.

தமிழ்ப் பெண் வாதத்தை முன் வைக்கும்போது ஷெரின் போன்றோர் தமிழ்ப் பெண்ணுக்கு மட்டும் கலாச்சாரம் உள்ளதா என்று கேட்டாரே?

கலாச்சாரம் அனைத்து மொழிகளுக்கும் உள்ளது. இதை தமிழ்ப் பெண் என்றவுடன் கலாச்சாரத்தைக் கொண்டுவந்தது ஷெரின் தான். இங்கு வீட்டிற்குள் என்ன நடந்தது. உள்ளே வருகிறார்கள். சிலர் உடை சரியில்லை. அதன்பின்னர் முதல் நாளிலிருந்தே காதல் வருகிறது. கல்யாணம் செய்துகொண்டாலும் சரி என்று சொல்லி முடிவெடுக்கிறார்கள். அதன்பின்னர் அந்தப் பெண் நகர்ந்து சென்றுவிட்டார். பின்னர் அந்தப் பையனுக்கு வேறு ஒரு பெண் மீது காதல் வருகிறது. பின்னர் அவர்களுக்கு பாட்டில் பேபி பிறக்கிறது.

இதை சிலர் ஆதரித்தார்கள், நான் அதைக் கண்டித்தேன். அதைத் தப்பு என்று சொல்கிறேன், நண்பர்கள் நல்ல வழியில் கொண்டுசெல்லவேண்டும். தவறான பாதையில் சென்றால் பாராட்டக் கூடாது. பாட்டில் பேபி விஷயத்தில் முகின் தவறாகச் சித்தரிக்கப்படுவார் என்று சொன்னதுதான் நடந்தது. கீறிக்கொள்வது, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, வந்தவுடன் ஒருவரிடம் காதல் கொள்வதும். இதெல்லாம் என்ன?

பிக் பாஸ் விதிமுறைகளுக்கு உட்பட்ட விளையாட்டு நிகழ்ச்சி. இதில் உங்கள் கருத்தைத் திணிப்பது எப்படி சரியாக இருக்கும்?

விளையாட்டு நிகழ்ச்சி என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா? செய்துவிட்டு விளையாட்டு நிகழ்ச்சி என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது கேம்ஷோ அல்ல, ரியாலிட்டி ஷோ. நீங்கள் நீங்களாக இருங்கள் என்பதே. ஆரம்பத்தில் உஷாராக இருந்தவர்கள் பின்னர் அவர்கள் நிஜ முகத்தை எப்படிக் காட்டினார்கள் அல்லவா?

நீங்கள் நீங்களாக இருங்கள் என்பதே அந்த நிகழ்ச்சியின் கருப்பொருள். கேம் ஷோ என்றால் டாஸ்க் மட்டும் வைத்து நடத்திவிட்டுச் செல்லலாமே. ஏன் சொந்த வாழ்க்கையைப் பற்றி சொல்லச் சொல்ல வேண்டும். கருத்து வேறுபாடுகளைக் காட்ட வேண்டும். ஆகவே இது கேம் ஷோ அல்ல, ரியாலிட்டி ஷோ என்பது என் கருத்து.

இவ்வாறு மதுமிதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x