

சென்னை
தன் உயிர் இருக்கும்போதே, எழுவர் விடுதலை தொடர்பான கோப்பில் மை படட்டும் என, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், நளினி ஆகியோர் 28 ஆண்டுகளைக் கடந்து சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், நளினி, தன் மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பரோலில் உள்ளார்.
பேரறிவாளன்: கோப்புப்படம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என, உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர்களை விடுதலை செய்யும்படி, ஆளுநருக்கு கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால், தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததற்கு, எழுவர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் காரணமாக இருக்கும் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அந்த வழக்கும் கடந்த மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்து இன்றுடன் (செப்.9) ஓராண்டு நிறைவடைகிறது.
இதுதொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அமைச்சரவை பரிந்துரைத்து ஓராண்டு. நிரபராதி, விடுதலை செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்குத் தீர்வு அரசியல் சட்டம்161 என அறிவீரே! 29 வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.