

ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ராமேசுவரத்தில் தனுஷ்கோடி - அரிச்சல்முனை இடைப்பட்ட பகுதியில் இன்று (திங்கள்கிழமை) நடமாடிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரைணயில் அவர் இலங்கை வவுணியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த முருகையா மகன் அருண் ராஜ் (24) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மண்டபம் கியூ பிரிவு அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடத்த 6 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகவும், அவர்களில் தீவிரவாதிகளில் 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பாகி்ஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், 6 பேரும் இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து முகாமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவினர் மாநில காவல்துறையை எச்சரித்தனர்.
அந்த தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
அந்த எச்சரிக்கை வெளியானது முதலே ராமேஸ்வரத்தில் கடலோர காவல் படையினர் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை கடற்படை திட்டவட்டமாக மறுத்திருந்தாலும்கூட தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இன்று காலை சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.