'முகவரி இல்லாத டிடிவி தினகரனை ஊருக்குக் காண்பித்தது புகழேந்தி'- வைரல் வீடியோவால் பரபரப்பு

வீடியோவில் எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்
வீடியோவில் எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்
Updated on
1 min read

கோவை

முகவரியே இல்லாத டிடிவி தினகரனை ஊருக்குக் காண்பித்தது புகழேந்திதான் என்று அமமுக நிர்வாகியான புகழேந்தி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில், ''அமமுக நிர்வாகிகள் சிலர் புகழேந்தியைச் சந்தித்துப் பேசினர். அவருக்கு சால்வையையும் அணிவித்தனர். அதைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் புகழேந்தி பேசுகிறார்.

அப்போது, ''இருக்கும் இடத்திலும் செல்லும் இடத்திலும் முகாந்திரம் இல்லாமல், நாம் இருக்கக் கூடாது. நம்முடைய பதவியைச் சரிசெய்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதனால் உட்கார்ந்திருக்கிறேன். இங்கு யாருடனும் இருக்க எனக்கு விருப்பம் இல்லை. நிறையத் தியாகம் செய்திருக்கிறேன்.

முகவரி இல்லாமல் 14 வருடங்கள் வெளியே இருந்த டிடிவி தினகரனை ஊருக்குக் காண்பித்தது புகழேந்திதான். உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் ஜெயலலிதா இறக்கும்போது கூட தினகரன் கிடையாது. நாம்தான் போராட்டங்களை மேற்கொண்டுதான் அவரை வெளியே காண்பித்தோம்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கு யாருடனும் இருக்க எனக்கு விருப்பம் இல்லை என்று புகழேந்தி பேசிய வீடியோவால் அமமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புகழேந்தி வேறு கட்சிக்குச் செல்வதற்கான முன்னோட்டம்தான் இது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, அதிமுக இரண்டாகப் பிரிந்தது. இதில் அதிமுகவில் இருந்து விலகி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உருவானது. இதில் முக்கிய நிர்வாகிகளாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வி.பி.கலைராஜன் ஆகியோர் விலகி, திமுகவில் இணைந்தனர்.

அதேபோல அதிமுகவில் இருந்து அமமுகவுக்குச் சென்ற செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். இதேபோல பொள்ளாச்சியைச் சேர்ந்த கே.எம்.நாகராஜன், திமுக நெசவாளர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அமமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்த இசக்கி சுப்பையாவும், கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புகழேந்தியின் பேச்சு அமமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in