Published : 09 Sep 2019 12:03 PM
Last Updated : 09 Sep 2019 12:03 PM

ப.சிதம்பரம் கைது: இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம்; பீட்டர் அல்போன்ஸ் பேச்சு

சென்னை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி, திஹார் சிறையில் உள்ளார். அவரின் கைதை, காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். ப.சிதம்பரம் கைது அரசியல் சதி என குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய அரசைக் கண்டித்து நேற்று (செப்.8) நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ப.சிதம்பரம் கைது அவருக்கு ஏற்பட்டிருக்கும் சோகம் அல்ல, நாட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவு எனத் தெரிவித்தார்.

ப.சிதம்பரம்: கோப்புப்படம்

"இன்றைக்கு நடந்திருக்கிற சோகம், ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்டிருக்கும் சோகம் என யாராவது நினைத்தால், அது பெரிய தவறு. அவரின் கைது, ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட சோகம் அல்ல. இந்திய நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம். ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய நெருக்கடி. மனித உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி.

ஜனநாயகம் எப்படி நடக்கும்? கருத்துப் பரிமாற்றம் இல்லாத ஜனநாயகம் எங்கே இருக்கிறது? விமர்சனம் இல்லாத ஜனநாயகம் எங்கே இருக்கிறது? விவாதிக்காமல், சட்டப்பேரவையும் நாடாளுமன்றமும் எப்படி நடக்கும்? அரசாங்கம் செய்யும் தவறுகளை யார் சுட்டிக் காட்டுவது? அரசாங்கம் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் எல்லாம், சிறைச்சாலைக்குள் போக வேண்டும் என்றால், இதனை எப்படி ஜனநாயகம் என அழைக்க முடியும்?," என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x