Published : 09 Sep 2019 11:53 AM
Last Updated : 09 Sep 2019 11:53 AM

பெரிய திரையரங்குகளை 3 சிறிய திரையரங்குகளாக மாற்ற அனுமதி: அமைச்சர் கடம்பூர் ராஜு

கோவில்பட்டி

பெரிய திரையரங்குகளை 3 சிறிய திரையரங்குகளாக மாற்ற விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இணையதளத்தில் திருட்டுத்தனமாக செய்தி வெளியாவதைத் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கும். பெரிய திரையரங்குகளின் உரிமையாளர்கள், 3 சிறிய தியேட்டர்களாக மாற்ற அனுமதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இதற்குப் பல துறைகளில் அனுமதி பெற வேண்டிய நிலை முன்பு இருந்தது. இப்போது பொதுப்பணித் துறையில் மட்டும் அனுமதி பெற்றால் போதும் என்ற நிலையை உருவாக்கி உள்ளோம்.

அதேபோல தியேட்டர்கள் பற்றாக்குறையால் சுமார் 200 படங்கள் திரையிட முடியாத நிலையில் உள்ளன. இதனால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். இதற்காக பெரிய திரையரங்குகளை 3 சிறிய திரையரங்குகளாக மாற்ற விரைவில் அனுமதி அளிக்கப்படும்.

இதன்மூலம் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதிக திரைப்படங்களைத் திரையிட முடியும். திரைத்துறையினரின் அனைத்துக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

அண்மையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, "அனைத்து டிக்கெட்டுகளையும் ஆன்லைனிலேயே விற்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த பல விதிமுறைகளை வகுத்துள்ளோம். திரையரங்குக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணமும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரக்கட்டுப்பாடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் விற்கப்படும் தின்பண்டங்களுக்கும் விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x