Published : 09 Sep 2019 11:13 AM
Last Updated : 09 Sep 2019 11:13 AM

தமிழ்ச்சமூகம் தான் பதில் சொல்ல வேண்டும்: அரசியல் வருகை குறித்து சகாயம் ஐஏஎஸ் பதில்

நாமக்கல்

பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி விலகுவது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சகாயம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (செப்.8) தனியார் நிகழ்ச்சியொன்றில் சகாயம் ஐஏஎஸ் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ள மொழிகளில், தமிழ் உட்பட எந்தவொரு மொழியின் முக்கியத்துவமும் குறைக்கப்படக் கூடாது எனத் தெரிவித்தார்.

காவிரி உபரிநீர் திட்டத்தை அரசு ஆராய்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக்கூறிய சகாயம் ஐஏஎஸ், ஏரி, குளங்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே தண்ணீர் பிரச்சினையைக் கையாள முடியும் எனத் தெரிவித்தார்.

மக்கள் பாதை இயக்கம் எப்போது அரசியல் இயக்கமாக மாறும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சகாயம் ஐஏஎஸ், தமிழ்ச் சமூகம் தான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பதிலளித்தார்.

இது தொடர்பாக சகாயம் ஐஏஎஸ் பதில் அளித்தும் பேசும்போது, "மக்கள் பாதை இயக்கம் அடிப்படையில் சமூக இயக்கம். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சமூகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பிரிவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்காக வழிகாட்டுவதற்கும், தமிழ் வழியில் படிக்கக்கூடிய ஏழை, எளிய பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதற்காகவும், ஏழை விவசாயிகளுக்கு 'கலப்பை' என்கிற திட்டத்தில் உதவுவதற்காகவும், நெசவாளர்களுக்கு 'தறி' என்ற திட்டத்தின் மூலம் உதவிக்கரம் நீட்டவும் என 20 திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

தமிழ்ச் சமூகத்தை நேசிப்பதன் வெளிப்பாடாகத்தான் இதனைச் செயல்படுத்தி வருகிறோம். இன்றைக்கு அது சமூக இயக்கமாகத்தான் இருக்கிறது. அது நாளை அரசியல் இயக்கமாக மாறுமா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது, தமிழ்ச் சமூகம் தான் பதில் சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி விலகல் குறித்துப் பேசிய சகாயம் ஐஏஎஸ், "பொதுவாக ஒரு அரசு ஊழியர் எந்த நிலையிலும் பொறுப்பிலிருந்து விலக விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அதில், முடிவெடுக்க வேண்டியது உயர் அதிகாரிகள் மற்றும் அரசுதான். பதவியிலிருந்து விலக முடிவெடுப்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம்", எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x