

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜனின் உறுதிமொழிப் பத்திரத்தை ஏற்று, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிவந்து சிவராசனிடம் கொடுத்தேன். ஆனால், அவை எதற்காக வாங்கப்பட்டன என்பது எனக்குத் தெரியாது’ என்று பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கிவிட்டு பதிவு செய்தேன் என கூறியுள்ளார்.
அப்போது வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்திருந்தால் பேரறிவாளன் இப்போது வெளியில் நடமாடிக் கொண்டிருப்பார். பேரறிவாளன் மீது எந்தத் தவறும் இல்லை. நான் செய்த தவறை திருத்தும் நோக்கத்துடன் நடந்த உண்மைகள் அனைத்தையும் உறுதிமொழிப் பத்திரமாக தயாரித்து சிபிஐ வழக்கறிஞரிடம் அளித்துள்ளேன் என்றும் தியாகராஜன் கூறியுள்ளார்.
இந்த தகவல்களின் அடிப்படையில் இவ்வழக்கை விசாரிக்க வேண்டியது அவசியமானதாகும். ஆனால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. நிரபராதிகளுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக கூடுதல் தண்டனை வழங்க மத்திய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தியாகராஜனின் உறுதிமொழிப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.