

மு.யுவராஜ்
சென்னை
தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலத்தை வடகிழக்கு பருவமழை காலத்தில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகம் 1,076 கி.மீ நீள கடற்கரையை கொண்டது. 13 கடலோர மாவட்டங்களில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். பைபர் படகு, விசைப்படகு உள்ளிட்டவற்றின் மூலம் அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மீன்வளத்தை பாதுகாக்க கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களில் இருந்து 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. இதன்படி, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலும், மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த காலக்கட்டத்தில், மீனவர் கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ஒரு மீனவ குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீனவர்களின் கோரிக்கை அடிப்படையில் மீன் பிடி தடைக்காலத்தை மாற்றம் செய்வது தொடர்பாக பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தன.
இதைத் தொடர்ந்து, தமி ழகத்தில் மீன் பிடி தடைக்காலத்தை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக் குமாரிடம் கேட்டபோது, “தடைக் காலம் தொடர்பாக மீனவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப் படையில், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தடை காலத்தை மாற்ற வேண்டும் என்று மீன்வளத் துறையின் செயலாளர் மூலம் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், தடைக்காலத்தை அமல்படுத்துவது அனைத்து கடற்கரையோர மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் மத்திய அரசு நடத்தவுள்ள மாநில மீன்வளத் துறை அமைச்சர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் மீன்பிடி தடைக்காலத்தை மாற் றம் செய்வது தொடர்பான விவகாரத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளோம். மீன்பிடி தடைக்காலத்தை மாற்றம் செய்வதற்கு தொடர்ந்து முயற்சி எடுப்போம்" என்றார்.