

தூத்துக்குடி,
பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி மெச்சக் கூடியதாக இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில், "மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் மோடி ஆட்சி 100 நாளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 100 நாள் மெச்சக்கூடிய ஆட்சி இல்லை.
வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பாழ்பட்டுக் கிடக்கிறது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் மோட்டார் வாகனத்துறை சரிந்துவிட்டது. தறியில் பாகும் நூலும் சேர்த்து நெய்த ஆடை போல 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி இந்தியாவை அழகாக பிணைத்து வைத்திருந்தது.
ஆனால், பாஜகவினர் அதனை கிழித்துவிட்டார்கள். நாடு ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வமான விஷயங்கள் எதையும் செய்யவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசுகையில், வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள தமிழக முதல்வர் தமிழகத்தின் நலனுக்காக அதிக முதலீடுகளை ஈர்த்தார் என்றால் காங்கிரஸ் அதனை வரவேற்கும். இருப்பினும், கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை தந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கேள்வித்தாள்களில் தலித்,முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துகள் இருந்தது குறித்து கேட்டதற்கு, "பாஜகவின் சனதான ஆட்சி என்பதற்கு இது ஓர் உதாரணம்" என்று கூறினார்,
மேலும் "தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரியாக பராமரிக்க வேண்டும். அது இருபக்கமும் கூர்மையிருக்கும் கத்தி போன்றது. சட்டம், ஒழுங்கு சரியில்லை எனில் அதன் பாதிப்பு அவர்களையே வந்தடையும்" என்றார்.