

கி.பார்த்திபன்
நாமக்கல்
சந்திரயான் - 2 விண்கலத்தின் ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்காக மண் அளித்த நாமக்கல் கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
நிலவின் மேற்பரப்பில் உள்ள அனார்த்தசைட் மண், பாறை வகைகள், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சித்தம்பூண்டி, குன்னமலை கிராமத்தில் இருப்பது பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை ஆய்வின் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து பெரியார் பல்கலைக்கழகத்தினர் அளித்த தகவலின்படி மேற்குறிப்பிட்ட இரு கிராமங்களிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது. மேற்குறிப்பிட்ட இரு கிராமங்களில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 50 டன் அளவுக்கு மண் மாதிரிகள் சேகரித்து பெங்களூரு இஸ்ரோ வுக்கு அனுப்பப்பட்டது. அங்கு அனார்த்தசைட் மண் வகையை அமைத்து ரோவர் வாகனம் ஓடு திறன் பரிசோதனை செய்யப்பட் டது.
இதுகுறித்து குன்னமலை கிராமத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற தபால் துறை ஊழியர் பி.சண்முகம் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனது விளைநிலத்தில் இருந்து அதிகாரிகள் மண் எடுத்தனர். இதுபோல், சித்தம்பூண்டியிலும் மண் எடுக்கப்பட்டது. எதற்காக மண் எடுக்கப்பட்டது என அப்போது தெரியவில்லை. பின்னர், நிலவுக்கு அனுப்பப்படும் சந்திரயான் - 2 விண்கலத்தின் ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்காக இங்கு மண் எடுக்கப்பட்ட விவரம் செய்தி வாயிலாக அறிந்தேன்.
நிலவில் உள்ள மண்ணும், இங் குள்ள மண்ணும் ஒரே வகையை சேர்ந்தது என்பது ஆச்சர்யமாக உள்ளது. இருப்பினும் கடைசி நேர தொழில்நுட்ப சிக்கலால் விக்ரம் லேண்டர் தரையிறங்காமல் போனது எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது’’ என்றார்.