

கடந்த 2014 - ம் ஆண்டு மலேஷிய விமானம் மாயமானது தொடர்பாக அறிவியல் ரீதியான விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2014 மார்ச் 8-ம் தேதி, மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய போயிங் விமானம், 12 விமான ஊழியர்கள், 227 பயணிகள் என, 339 பேருடன் காணாமல் போனது. அந்த விமானத்தின் கதி என்ன என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில், கடந்த 2014 மார்ச் - 8 ம் தேதி திருவனந்தபுரம் அந்தோணியார் கோவில் அருகில் இருந்த போது, விமானம் ஒன்று கடலில் விழுந்ததைப் பார்த்தாகவும், விமானம் மாயமானது தொடர்பாக அறிவியல் ரீதியான விசாரணையை நடத்த உத்தரவிடக் கோரி, திருவனந்தபுரம் கழக்கூட்டத்தைச் சேர்ந்த பிஜு குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், விமானம் விழுந்தது குறித்து கேரள மாநிலம் தும்பாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) சென்று தகவல் தெரிவித்த போது, ரேடார் மூலம் ஆய்வு செய்த போதும், விமானம் அரபிக்கடலில் விழுந்தது குறித்து சரிவர தெரியவில்லை என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்போதைய கேரள முதல்வர் அலுவலகத்திற்கும், மலேஷியா விமான காவல் ஆணையத்திடமும், சென்னையில் உள்ள மலேஷிய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தும், கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், விமானம் காணாமல் போனது குறித்து அறிவியல் ரீதியிலான விசாரணையை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.