

ராமேசுவரம்
கடலில் கரையாமல் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கரையோரங்களில் ஒதுங்கியிருக்கும் விதிகளை மீறி உருவாக்கப்பட்ட ரசாயன விநாயகர் சிலைகள் பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 2-ம் தேதிஅன்று கொண்டாடப்பட்டது. இதற்காக வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்துப் பூஜை செய்து, அருகே உள்ள நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பொது இடங்களில் பிரம்மாண்ட வடிவில் விதவிதமான வடிவில் 24,890 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியின் போது உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளில் பெரும்பகுதி நீர் நிலைகளிலேயே கரைக்கப்படுகின்றன. அவ்வாறு கரைக்கப்படும் சிலைகளால் நீர் நிலைகளுக்கோ அதில் வாழும் உயிரினங்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என அரசு விதி வகுத்துள்ளது. இதனால் ரசாயனக் கலவை மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற எளிதில் கரையாத பொருள்களைக் கொண்டு விநாயகர் சிலைகளை உருவாக்கக் கூடாது என அரசு விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிலைகளை உருவாக்குபவர்களில் பலர் இதனை முழுமையாகக் கடைபிடிக்காமல் அரசு விதிகளை மீறி சிலைகளை ரசாயனக் கலவை கொண்டு தயார் செய்கிறார்கள்.
இந்நிலையில் ராமேசுவரம் கடலில் கடந்த நான்கு நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் வீடுகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட சிறிய வகை விநாயகர் சிலைகள் கரைந்து போகாத நிலையில் சனிக்கிழமை கடல் அலையினால் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. இவ்வாறு முழுமையாகக் கரையாமல் கழிவுப் பொருள்களுடன் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளின் நிலை இங்கு புனித நீராட வரும் பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளதுடன், ரசாயனக் கலவைகளுடன் கூடிய இந்த விநாயகர் சிலைகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடலோர சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ரசாயனங்கள் கலந்த, பூச்சுகள் நிறைந்த விநாயகர் சிலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது போல் அல்லாமல் இனி வரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிலைகளை உருவாக்கி, நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எஸ். முஹம்மது ராஃபி