

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே ஆவூரில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி கோரையாறு சூறையாடப்படுவதைக் கண்டித்து 20 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மதயானைப்பட்டியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 12 ஏக்கரில் அமைந்துள்ள இந்தக் குவாரியில் அனுமதிக்கப்பட்ட 1 மீட்டர் ஆழம், சுமார் 800 மீட்டர் நீளத்துக்குப் பதிலாக 10 மீட்டர் ஆழம் மற்றும் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டுள்ளதால் கோரையாறு பகுதி பள்ளமாகி உள்ளது.
இதனால் மழை காலத்தில் ஆற்றில் இருந்து அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் சுமார் 6,000 ஏக்கரில் பாசனம் மேற்கொள்வது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதை தடுக்கக் கோரி பல முறை பல்வேறு துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும்,வாகனங்களை சிறைபிடித்து ஒப்படைத்தும் நிரந்தர தீர்வு இல்லை.
இதைக் கண்டித்து இன்று ஆற்றில் மணல் அள்ளிய 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 20 லாரிகளை ஊர் பொதுமக்கள் திரண்டு சென்று சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விராலிமலை வட்டாட்சியர் சதீஸ் மற்றும் போலீஸார் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் சமரசம் செய்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.
கேள்வி கேட்டால் கொலை..
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர், "அரசு அனுமதித்ததைவிட பல மடங்கு கூடுதலாக மணல் அள்ளி,ஆறு சூறையாடப்பட்டுள்ளது.
இதனால் ஆறு பள்ளமாகவும், விளைநிலங்கள், நீர் நிலைகள் மேடாகவும் மாறிவிட்டதால் சுமார் 6,000 ஏக்கரில் விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி மணல் அள்ளியது குறித்து அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்த இதே ஊரைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.
எனவே, ஆற்றை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஓரிரு நாட்களில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்" என்றனர்.
- எஸ்.சுரேஷ்