Published : 07 Sep 2019 03:09 PM
Last Updated : 07 Sep 2019 03:09 PM

தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் இன்று (செப்.7) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக. திமுக தமிழை வளர்த்ததா? அறிவியல் தமிழை ஜெயலலிதா கொண்டு வந்தார். 8-ம் உலகத் தமிழ் மாநாட்டை ஜெயலலிதா நடத்தினார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை ஜெயலலிதா நிறுவினார். தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தை எம்ஜிஆர் அமைத்தார்.

திமுக தமிழுக்கு ஒரேயொரு செம்மொழி மாநாடு நடத்தியது. செம்மொழி மாநாடு, குடும்ப மாநாடு. குடும்பத்தில் உள்ளவர்களை முன்னே அமரவைத்து, உலகம் முழுவதும் திரையில் காண்பித்ததுதான் மிச்சம். அதனால் ஏதாவது பயன் இருந்ததா? ஒன்றும் இல்லை.

இன்றைக்கு கணினித் தமிழ் வளர்ந்திருப்பது ஜெயலலிதா போட்ட விதையால்தான். தமிழுக்கு உண்மையாகத் தொண்டாற்றக்கூடிய இயக்கம் திமுக. தமிழை வைத்து வியாபாரம் செய்துவிட்டு, தமிழுக்கு நாங்கள் தான் பற்றாளன் என்கிறது திமுக. தமிழுக்குத் துரோகம் செய்தது திமுக.

இது பதவி உயர்வுக்கான தேர்வு. புதிதாகப் பணிக்குத் தேர்ந்தெடுத்தால், அதற்கு மாநில மொழியில் எழுத விருப்பம் தெரிவிக்கலாம். 1996-2001 ஆட்சிக்காலத்தில் திமுக மாநிலத்திலும், காங்கிரஸ் கூட்டணி மத்தியிலும் ஆட்சி புரிந்தது. 2006-2011 காலத்திலும், திமுக மாநிலத்திலும், காங்கிரஸ் மத்தியிலும் ஆட்சி செய்தது. அந்த சமயத்தில் இத்தேர்வை மாநில மொழிகளில் நடத்த என்ன நடவடிக்கைகளை திமுக எடுத்தது? அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லட்டும்.

இது ஊரை ஏமாற்றும் செயல். வானத்திலிருந்து குதித்தது போன்றும், தமிழக மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்றும் 'தமிழ், தமிழ்’ என்கின்றனர். தமிழுக்கு எந்த நிலையிலும் அழிவு இல்லை. தமிழ் இன்னும் வளரும், அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. திமுகவால்தான் பாதிப்பு ஏற்படும்," எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ப.சிதம்பரம் கைது குறித்துப் பேசியபோது, "ப.சிதம்பரம் கைதுக்குப் பிறகு திமுக அமைதி காட்டுகிறது. நான் சொன்னது நிரூபணமாகிவிட்டது. கலைஞர் தொலைக்காட்சி வழக்கு இருக்கின்றது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கைத் தோண்டப் போகிறார்களாம். சாதிக் பாட்ஷா மரணத்தைத் தோண்டப் போகிறார்கள் என செய்தி வருகிறது. இவை, ஸ்டாலினுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x