

திருச்சியில் எரிவாயு தகன மயானத்தில் சடலத்தை எரிக்கா மலேயே உறவினர்களிடம் அஸ்தி யைக் கொடுத்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிப் புதூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பாப்பம்மாளின் சடலத்தை தகனம் செய்வதற்காக நேற்று முன்தினம் கருமண்டபம் எரிவாயு தகன மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். தகன மேடைக்குள் சடலத்தை அனுப்பிய சிறிது நேரத்திலேயே அங்கிருந்த ஊழியர் குமார், மூதாட்டியின் அஸ்தி என்று கூறி சாம்பல் பொட்டலத்தைக் கொடுத்துள்ளார்.
அஸ்தியில் சூடு இல்லாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், ஊழியர் குமாரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு, எரிவாயு தகன மேடைக்கு பின்புறம் சென்று பார்த்தபோது, மேடைக்கு அருகே இருந்த அறைக்குள் மூதாட்டியின் சடலமும், முழுமையாக எரிக்கப்படாத வேறொரு சடலமும் இருந்ததைக் கண்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எரிவாயு தகன மயானம், அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
தனியார்வசம் பொறுப்பு?
எரிவாயு தகன மயானத்தை திருச்சி மிட் டவுன் ரோட்டரி சங்கம் நடத்தி வருவதாக மாநகராட்சி கூறி வந்த நிலையில், தங்கள் பொறுப்பில் மயானம் இல்லை என ரோட்டரி சங்கத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும், ரோட்டரி சங்கத்திடமே பராமரிப்பு உள்ளதாகவும், அவர்களால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மோசடியில் ஈடுபட் டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநகராட்சி தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி உதவி ஆணையர் (பொறுப்பு) எஸ்.கண்ணன் கூறும்போது, “திருச்சி மிட் டவுன் ரோட்டரி சங்கம் பொறுப்பில்தான் மயானம் உள்ளது. இங்கு வரும் சடலங்களின் எண்ணிக்கையை சுகாதார மேற்பார்வையாளர் தினமும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறார். எரிவாயுவைக் கொண்டு செயல்படும் மயானத்தில் கொட்டாங்கச்சி, வைக்கோல் ஆகியவை மூட்டைகளில் வைக் கப்பட்டுள்ளன.
சடலத்தை எரிக்க அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம். இது குறித்து விளக்கம் கேட்டு மிட் டவுன் ரோட்டரி சங்கத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்” என்றார்.
திருச்சி மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் வி.வி.சுப்பிரமணியன் கூறும்போது, “எரிவாயு தகன மயானத்தை எங்கள் சங்கம் நிர்வகிப்பதாகக் கூறுவது தவறு. மயானம் பயன்பாட்டுக்கு வந்த தொடக்கத்தில் நிர்வகித்திருக்கலாம். அந்த ஒப்பந்தமும் 3 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், அதற்குப் பிறகு எங்கள் சங்கத்தின் பெயரில் சார்லஸ் என்பவர் நிர்வகித்து வருவது குறித்து எங்களுக்குத் தெரியாது. ஏனெனில், எங்கள் சங்கத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சார்லஸ் என்று யாரும் இல்லை.
மயானத்தில் அளிக்கப்படும் ரசீதில் எங்கள் சங்கத்தின் பெயர் இருப்பதும் இப்போதுதான் தெரிய வந்தது.
அந்த ரசீதிலிருந்து எங்கள் சங்கத்தின் பெயரை நீக்குமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து கடிதம் கொடுக்க உள்ளோம். மேலும், சங்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் கன்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் உமாசங்கர் கூறும் போது, “இதுகுறித்து விசார ணை நடத்த தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
சடலங்களை எரிக்காமல் இருந்த தற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். தலை மறைவாக உள்ள எரிவாயு தகன மேடை ஊழியர்கள் குமார், ராணி ஆகியோரைத் தேடி வருகிறோம்” என்றார்.
இறந்தவரின் அஸ்தியை புண்ணிய தீர்த்தங்களில் கரைத் தால், அவர்களது ஆன்மா சாந்தி யடையும் என்பது மக்களின் நம்பிக்கை.
இதற்கு ஊறு விளை விக்கும் வகையில், சடலத்தை எரிக்கா மலேயே அஸ்தியை வழங்கியது மக்களிடையே மாநகராட்சி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத் தியுள்ளது.
பல லட்சத்துக்கு விற்பனையா?
சடலத்தை எரியூட்டாமல் மோசடி செய்து வந்தது, சடலங்களை லட்சக்கணக்கில் விற்பனை செய்வதற்காகத்தான் என்றும், ஏற்கெனவே இதுபோல நடந்திருக்கலாம் என்றும் மக்களிடம் தகவல் பரவியது.
இதுகுறித்து திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் எம்.கே.முரளிதரனிடம் கேட்டபோது, “இறந்த 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் உடலை பதப்படுத்தினால்தான், அதை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். இறந்த உடனேயே உடல் கெடத் தொடங்கிவிடும். இறந்து வெகு நேரம் ஆகிவிட்டால், உடலைப் பயன்படுத்த முடியாது” என்றார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறை பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “இறந்த 6 மணி நேரத்துக்குள் உடலை பதப்படுத்திவிட வேண்டும். குளிர்பதனப் பெட்டியில் சில நாட்கள் வைத்திருந்து கொடுக்கப்படும் உடல் என்றாலும், பதப்படுத்தப்படுவதற்கு ஏற்றதா என்பதை ஆய்வு செய்த பின்னரே ஏற்றுக் கொள்ளப்படும். இது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்” என்றார்.