

இது தோல்வி என்று அர்த்தமல்ல என்று இஸ்ரோ நிகழ்வுகள் குறித்து கமல் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் காண, கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக் காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (செப். 6) இரவு பெங்களூரு வந்தார்.
அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும் பெங்களூரு வந்தனர். சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், இன்று (செப்.7) அதிகாலை, 2:15 மணி அளவில், தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், இஸ்ரோவிலிருந்து பிரதமர் மோடி கிளம்பும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் மனமுடைந்து அழுதார். அவரை பிரதமர் மோடி தேற்றினார்.
இந்த நிகழ்வுகள் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இஸ்ரோவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தனது ட்விட்டர் பதிவில், "இது தோல்வி என்று அர்த்தமல்ல. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கற்றதற்கான தருணம் வரும். இதுதான் அந்த அற்புதமான தருணம். விரைவில் நிலவை அடைவோம். இஸ்ரோவுக்கு நன்றி. தேசம் இஸ்ரோவை நம்புகிறது, பாராட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.