கோடிக்கணக்கான மக்களை விண்வெளி நோக்கிப் பார்க்க ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி: ஸ்டாலின் பெருமிதம்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

கோடிக்கணக்கான மக்களை விண்வெளி நோக்கிப் பார்க்க ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் காண, கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக் காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (செப். 6) இரவு பெங்களூரு வந்தார். அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும் பெங்களூரு வந்தனர்.

சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், இன்று அதிகாலை, 2:15 மணி அளவில், தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.

இதையடுத்து, மனம் துவண்டிருந்த விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதையடுத்து, மனம் உடைந்து அழுத இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் தேற்றினார்.

இந்நிலையில், சந்திராயன் - 2 விண்கலத்திற்காக உழைத்த விஞ்ஞானிகளை அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கோடிக்கணக்கான மக்களை விண்வெளி நோக்கிப் பார்க்கவும், அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை வைக்கவும் ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி. முன்பைவிட நம்மை ஒருபடி முன்னே கொண்டு சென்றதற்காக நம்முடைய விஞ்ஞானிகள் குறித்துப் பெருமை கொள்கிறோம்", என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in