

எல்.மோகன்
நாகர்கோவில்
உலக அளவில் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றை பாதுகாக்கும் வகை யில் செப்டம்பர் முதலாவது சனிக் கிழமை, `கழுகுகள் தின’மாக உலக நாடுகளால் கடைபிடிக்கப் படுகின்றது.
தமிழகத்தில் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் கழுகுகள் உள்ளன. கழுகுகளை பார்ப்பது அரிதாக உள்ளது. இறந்து அழுகும் பறவைகள், விலங்குகளின் உடலை உண்டு, அவற்றில் இருந்து நோய் கள் பரவாமல் தடுக்கும் சிறந்த துப்புரவு பணியை கழுகுகள் மேற்கொள்கின்றன.
எண்ணிக்கை குறைந்தது
உலகில் 23 வகையான கழுகு களில் 14 வகை கழுகுகள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. இந்தி யாவில் 7 வகை கழுகுகள் மட்டுமே காணப்படுகின்றன. வெண்முதுகு கழுகு, கருங்கழுத்து கழுகு, மஞ் சள்முக கழுகு, செந்தலை கழுகு ஆகிய 4 வகை கழுகுகள் தமி ழகத்தில் காணப்படுகின்றன. இவை நீலகிரி வனப்பகுதி, சத்தியமங்க லம், மாயாறு பள்ளத்தாக்கு, பண் டிப்பூர், கேரளாவில் வயநாடு பகுதி களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு, கீரிப்பாறை, ஆரல்வாய்மொழி மலைப்பகுதிகள் மற்றும் தாம்பரம், கொடைக்கானல், கோவை, தஞ்சை, திருநெல்வேலி பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கழுகுகள் பரவலாக இருந்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வனத் துறை கணக் கெடுப்பின்படி தமிழகத்தில் 600 கழுகுகள் இருந்தன. தற்போது, பாதியாக குறைந்துவிட்டன.
நாகர்கோவிலைச் சேர்ந்த பற வைகள் ஆராய்ச்சியாளர் சற் குணம் கூறியதாவது:
40 முதல் 70 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்ட அரிய பறவை இனம் கழுகு. இறந்த விலங்குகளின் உடல்களை உண் ணும் தன்மை கொண்டதால் `பிணந் தின்னி கழுகுகள்’ என்கின்றனர். கோமாரி, வெறிநோய், அடைப் பான், கழிச்சல், கணைநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மரணமடையும் போது, அவற்றை கழுகுகள் உண்ப தால், அந்நோய்கள் பிற விலங்கு களுக்கு பரவாமல் தடுக்கப்படுகின் றன. அதேநேரம், கழுகுகளிடம் இருந்து பிற உயிர்களுக்கும் நோய் பரவாது. `வன துப்புரவுப் பணியாளனாக’ திகழும் கழுகுகள், தற்போது பேராபத்துகளை எதிர்கொண்டு வருகின்றன.
மரணத்துக்கான காரணங்கள்
இனப்பெருக்க நேரத்தில் ஒரு முட்டை மட்டுமே இடுவதால் கழு கின் எண்ணிக்கையை அதிகரிப் பது எளிதல்ல. நோய்கள் பாதித்த கால்நடைகளுக்கு வழங்கப்பட்ட டைக்குனோபினாக், கீட்டோபு ரோபன் போன்ற மருந்துகளால் கழுகுகளின் சிறுநீரகம் பாதிக்கப் பட்டு, அவை மரணமடைவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன.
வனவிலங்குகளை வேட்டை யாடும் கும்பல், இறைச்சியை எடுத்துக் கொண்டு, வேட்டையாடப் பட்ட விலங்குகளின் மீது விஷத்தை தூவிவிடுவர்.
இவற்றை உண்ணும் கழுகுகளும் உயிரிழக்கின்றன. இவ்வாறு பேரழிவின் பிடியில் உள்ள கழுகுகளைப் பாதுகாத்து, அவற்றை பெருக்கும் முயற்சியில் வனத் துறை ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.