Published : 07 Sep 2019 07:58 AM
Last Updated : 07 Sep 2019 07:58 AM

ஓணம் பண்டிகையால் தமிழக பூக்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரிப்பு: நாளொன்றுக்கு 8 டன் பூக்கள் விமானம் மூலம் ஏற்றுமதி 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து வெளிநாடு களுக்கு ரோஜா உள்ளிட்ட அனைத்து வகைப் பூக்களும் தினமும் 8 டன் ஏற்றுமதியாகின்றன.

கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் 11-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இப்பண்டிகையின் முக்கிய அம்சமே அத்தப்பூ கோலம் போடுவதுதான். அதற்காக தமிழகத்தில் இருந்து தற்போது அதிகளவு பூக்கள் கேரளாவுக்கு விற்பனைக்கு செல்கின்றன. அதுபோல் கேரளாவைச் சேர்ந்த வர்கள் அதிகம் வசிக்கும் அமெ ரிக்கா, துபாய், பக்ரைன், மஸ்கட், அபுதாபி, குவைத், சவுதி அரேபியா போன்ற பல்வேறு நாடுகளுக்கு நேற்று முதல் விமானங்கள் மூலம் ஓணத்துக்காக பூக்கள் ஏற்றுமதி செய்வது தொடங்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி, அதைத் தொடர்ந்து முகூர்த்த தினங்கள், தற்போது ஓணம் பண்டிகை என்ப தால் பூக்கள் விலை உயரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இது வரை வீழ்ந்து கிடந்த பசுமை குடில் ரோஜா பூ விலை, கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. ஒரு பஞ்ச் ரோஜா ரூ.240 முதல் ரூ.350 வரை விற்கிறது. ஒரு பூ மட்டும் ரூ.11, ரூ.12-க்கு விற்கிறது.

இதுகுறித்து ரோஜா ஏற்றுமதியாளர் சிவா கூறியதாவது: தமிழகத்தில் முன்பு 3 ஆயிரம் ஏக்கரில் பசுமைக் குடில்களில் ரோஜா விவசாயம் நடந்தது. தண்ணீர் பற்றாக்குறை, சாதகமான தட்பவெப்பநிலை இல்லாததால் தற்போது 1,700 ஏக்கரில் மட்டுமே ஏற்றுமதி ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. அதனால், பூக்கள் வரத்துக் குறை வாக இருப்பதாலும் ஓணம் பண் டிகை, முகூர்த்த தினங்களாலும் ரோஜா பூக்களின் தேவை அதிக ரித்து விலையும் உயர்ந்துள்ளது.

பெங்களூரு சர்வதேச மலர் ஏற்றுமதி மையம், பெங்களூரு சிட்டி பூ மார்க்கெட்டில் பசுமைக் குடில் ரோஜா பூக்கள் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாகின்றன என்றார்.

ரோஜா பூக்கள் விலை உயர்ந்த நிலையில் மழையால் பாதிக்கப் பட்ட வெள்ளை சாமந்திப்பூ, மஞ்சள் சாமந்திப்பூ, வாடா மல்லி, செண்டுமல்லி (ஆரஞ்சு, மஞ்சள்), பட்டன் ரோஸ் பூக்களுக்கு எதிர் பார்த்த அளவு விலை உயரவில்லை. பூக்கள் ஈரமாக இருப்பதால் விலை குறைந்துள்ளதாக மலர் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

கோவையைச் சேர்ந்த சேது மாதவன் கூறுகையில், ‘‘ஓணம் பண்டிகையில் வெள்ளை சாமந்தி, மஞ்சள் சாமந்தி, வாடாமல்லி, செண்டுமல்லி, பட்டன் ரோஸ் பூக்கள் அத்தப்பூ கோலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது வெள்ளை சாமந்தி ரூ.150, மஞ்சள் சாமந்தி ரூ.90, செண்டுமல்லி ரூ.35 முதல் ரூ.45, பட்டன் ரோஸ் ரோஜா ரூ.60 முதல் ரூ. 80 வரை விற்பனையாகின்றன.

கேரள மக்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிந்துள்ளன. துபாய்க்கு மட்டும் நாளொன்றுக்கு 2 டன் ரோஜா ஏற்றுமதியாகிறது.

இன்றுமுதல் பெங்களூரு, கொச்சி, கோழிக்கோடு, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு தினமும் 8 டன் பூக்கள் வரை ஏற்றுமதி யாகின்றன. தொடர்ந்து 3 நாட் களுக்கு இந்தப் பூக்கள் ஏற்றுமதி யாகும்.

சனிக்கிழமை முதல் அனைத்துப் பூக்களின் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x