

தருமபுரி / சேலம்
கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 73 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருப்பதால் அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அங்குள்ள அணைகளில் இருந்து மீண்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன் தினம் மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நேற்று இரவு 8 மணி நிலவரப்படி நீர் வரத்து 73 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் 118.11 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 73 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 90.40 டிஎம்சி. அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு, நேற்று மாலை முதல் விநாடிக்கு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு 9 மணி முதல் 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் காவிரி கரையோர பகுதியில் உள்ள 12 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.