கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் எய்ட்ஸ்: இழப்பீடு கேட்ட பெண்ணின் மனு- உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் எய்ட்ஸ்: இழப்பீடு கேட்ட பெண்ணின் மனு- உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் தனக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக கூறி, இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாங்காட்டை சேர்ந்த 28 வயது நிரம்பியபெண் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய பிரசவத்திற்காக மாங்காட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின் பரிந்துரையின் பேரில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை மேற்கொண்ட போது ரத்தம் குறைவாக இருந்ததால் ரத்தம் ஏற்றி கொண்டதாகவும், தொடர்ந்து குழந்தை பெறுவதற்கு முன்னதாக ரத்த பரிசோதனை செய்த போது, தனக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய போது தான் தனக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று ஏற்பட்டதாகவும், அதற்கு தனக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் மீது உரிய நடவடிக்கை வேண்டுமென அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் குமார், “மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது, விசாரணை முடிவில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக் கொண்ட பின்னரே, ஹெச்.ஐவி நோய் தொற்று ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மாங்காட்டில் அந்தப்பெண் பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதே எச்ஐவி பரிசோதனையை மேற்கொள்ள அவருக்கு செவிலியர் அறிவுறுத்திய நிலையில், தான் தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே எச்ஐவி பரிசோதனை செய்து விட்டதாக கூறி எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.

பரிசோதனை செய்ய வேண்டிய இடங்களில் பரிசோதனையை மேற்கொள்ளாமல் புறக்கணித்து விட்டு பின்னர் நோய்த் தொற்று இருப்பதை கண்டறிந்து கூறிய மருத்துவமனை மீது குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது”. என வாதிட்டார்.

அதே நேரத்தில், அப்பெண்ணுக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட உடன், சம்பந்தப்பட்ட தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உரிய சிகிச்சைகள் அளித்ததோடு, குழந்தைக்கு எச்ஐவி நோய் தொற்று ஏற்படாமல் காப்பாற்றி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பெண்ணின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் அவருக்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில், பணி வழங்கி உள்ளதாகவும் அவர் கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பாதிக்கப்பட்டதாக கூறும் பெண்ணின் குற்றச்சாட்டுகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in