Published : 06 Sep 2019 05:53 PM
Last Updated : 06 Sep 2019 05:53 PM

ரஜினி தனிக்கட்சி தொடங்கினால் டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை

ரஜினி தனிக்கட்சி தொடங்கினால், டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கும் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், விரைவில் தெலங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார், இதனால் மாநிலத் தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அடுத்து தமிழக பாஜக தலைவராக ரஜினி நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை, அடையாறில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலையை அனுப்பும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ''ரஜினி தனிக்கட்சி தொடங்கினால், டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கும் ஏற்படும்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதே கடினம். நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக செய்திகள் வெளியாகின்றன. டிடிவி தினகரன் கட்சி தொடங்கி 5% வாக்குகள் பெறுவார் என்றேன். அதேபோல 5% வாக்குகளை மட்டுமே டிடிவி பெற்றார்.

கமல்ஹாசனும் நான் சொன்னது போலவே 7% வாக்குகளைப் பெற்றார். நான் ரஜினி குறித்துக் கூறவில்லை. ஆனால் பொதுவாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எல்லோர் மத்தியும் 'நாம் கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என்று அரசியல் ஆசை வந்துவிட்டது.

விரும்புவர்கள் தாராளமாகக் கட்சி ஆரம்பியுங்கள், அவர்களுக்கு எங்களின் வாழ்த்துகள். அதே நேரத்தில் அவர்களால் 6 முதல் 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெறமுடியும்.

அதிமுக அனைத்து சாதி, மதத்தினருக்கான கட்சி. இதுதான் எங்களுடைய நிலை. ஓ.பி.ரவீந்திரநாத் கூறியது அவரின் கருத்தாக இருக்கலாம்'' என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x