Published : 06 Sep 2019 04:50 PM
Last Updated : 06 Sep 2019 04:50 PM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் 117 அடியாக உயர்வு

சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, கே.ஆர்.எஸ், கபிணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கபிணி அணைக்கு விநாடிக்கு 24,321 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணைக்கு விநாடிக்கு 44,727 கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது. 84 அடியை மொத்த நீர்த்தேக்க உயரமாகக் கொண்டுள்ள கபிணி அணை 83.4 அடியை எட்டியது. இதேபோல், 124.8 அடியை நீர்த்தேகம் உயரமாக கொண்டுள்ள கே.ஆர்.எஸ் அணை நிரம்பி விட்டது.

இதன்காரணமாக, அந்த இரு அணைகளிலிருந்தும் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது நொடிக்கு 69000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபிணி அணையிலிருந்து நொடிக்கு 20000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 49000 கன அடி நீரும் காவிரியில் திறக்கப்படுகிறது.

இன்று (செப்.6) அதிகாலை வரை நொடிக்கு 63000 கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டதால், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நொடிக்கு 50000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலிலும் அதே அளவு நீர் பாய்வதால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அங்கு பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் இரண்டாவது நாளாக தடை நீடிக்கிறது.

மேட்டூர் அணையை சென்றடையும் நீரின் அளவும் உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு இன்று (செப்.6) நண்பகல் நிலவரப்படி, நொடிக்கு 50000 கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதனால், அந்த அணையின் நீர்மட்டம் 117.05 அடியாக உள்ளது. நீர் இருப்பு 88.33 டி எம்சியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நொடிக்கு 18000 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாயிலிருந்து 700 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நடப்பாண்டிலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x