Published : 06 Sep 2019 04:26 PM
Last Updated : 06 Sep 2019 04:26 PM

கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியாதா?- கே.எஸ்.அழகிரி திடீர் பேச்சு

திருநெல்வேலி

காங்கிரஸால் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட முடியாதா என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தன்னுடைய எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளது. அங்கு திமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கே.எஸ்.அழகிரி, ''நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். ஐம்பதாண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருக்கிறோமே, அதற்கு என்ன காரணம்? ஏன் நம்மால் ஆளுங்கட்சியாக வர முடியவில்லை?

பிற மாவட்டங்களில் நம்முடைய நிலை எப்படி இருந்தாலும் கூட, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நமக்கு பலம் இருக்கிறது. ஆனாலும் தனித்து நின்றால் பெரும்பான்மையான இடங்களில் நம்மால் வெற்றி பெற முடியுமா, முடியாதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதில் சொன்னால்தான் அல்லது பதிலைக் கண்டுபிடித்தால்தான், கட்சியைப் பிரச்சினைகளில் இருந்து வெளியே கொண்டு வரமுடியும். குடும்ப சண்டைகளில், சண்டைக்கு என்ன காரணம் என்பதை அறியாமலேயே தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருப்போம்.

காரணத்தை அறியாமல் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வட மாவட்டங்கள் பலவீனமாக இருக்கின்றன, தென் மாவட்டங்கள் பலத்துடன் உள்ளன. ஆனால் பலம் வாய்ந்த தென் மாவட்டங்களில் கூட்டணி இல்லாமல், வெற்றி பெற முடியுமா? அதற்கான சூழ்நிலையை அது அடைந்திருக்கிறதா?

இதைக் குறித்து விவாதிக்கத்தான் இந்தக் கூட்டம்'' என்றார் அழகிரி.

அதேபோல கூட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஒரு மனதாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு பிறகு, அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x