Published : 06 Sep 2019 04:28 PM
Last Updated : 06 Sep 2019 04:28 PM

தமிழகம் முழுதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை: அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் தலைமையில் ஆய்வு கூட்டம் 

15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் உட்பட தமிழகம் முழுதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், துறை ரீதியான அதிகாரிகள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது.

பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், டெங்கு மற்றும் தொற்று நோய்த்தடுப்பு குறித்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளிடையே பேசியதாவது:

“தமிழகத்தில் எதிர்வரும் பருவமழைக் காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும்.

சுகாதாரமான குடிநீர் அன்றாடம் விநியோகம் செய்யப்பட்டு கணினி வழி கண்காணிக்கப்பட வேண்டும். குடிநீரில் குறைந்தபட்ச குளோரின் அளவு 0.2 பிபிஎம் ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

திறந்த நிலை கிணறுகள் போன்ற நீராதாரங்களில் குளோரின் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான டயர், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட வேண்டும். மேலும், திறந்த நிலை தொட்டிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முறைப்படி பணியாளர்களை ஈடுபடுத்தி முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்

தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகை அடித்தல் மற்றும் கொசு மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

புகை அடிக்கும் இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக தேவைப்படின் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

கொசு ஒழிப்பு மருந்தின் தரம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டு முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். கொசு முட்டை மற்றும் கொசு புழுக்களை அழித்திடத் தேவையான அளவு மருந்தினை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாநகராட்சிப் பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்களில் உள்ள மேல் மாடிகளில் கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையிலான தேவையற்ற பொருட்களை மாநகராட்சி / உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களைக் கொண்டும் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் தனியார் மனைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். மழைநீர் வடிகால்களை தினமும் சுத்தப்படுத்தி வடிகாலில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு மருந்தை சரியான கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

தொற்று நோய்களைப் பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகை அடித்தல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பள்ளி / கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஊர்வலம், தகவல் கல்வி மற்றும் தொடர்பு ஆகிய முறைகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து தொற்று நோய் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு ஒழிப்பு குறித்த குறும்படங்கள் மாநகராட்சிகள்/நகராட்சிகள்/ பேரூராட்சிகள்/ஊராட்சிகளில் ஒளிப்பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த விவரங்கள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி நல அலுவலர்கள் மற்றும் அந்தந்த சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் சுகாதாரத் துறை துணை இயக்குநர்களிடம் இருந்து காய்ச்சல் கண்டவர்களின் பட்டியல் பெற்று அப்பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கென 2056 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 1245 நிரந்தர மலேரியா பணியாளர்கள், 2101 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3346 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 14,13,771 குடியிருப்பு இடங்கள், 12906 காலிமனை இடங்கள் மற்றும் 6917 பூட்டிய வீடுகள், 1665 அரசு கட்டடங்கள், 1841 பள்ளிக் கட்டடங்கள், 7722 கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், 326 அரசு மருத்துவமனைகள், 532 தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து வீடுகளிலும் 39 வாகனங்கள் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 227 கையினால் எடுத்து செல்லும் புகைப்பரப்பும் இயந்திரங்களை கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கால்வாய் மற்றும் நீர்வழிப்பாதைகளில் தூர் வாருதல், தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுதல் போன்ற பணிகளுக்காக ஆம்பிபியன் மற்றும் ரொபோடிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பாக சென்னையில் 131 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6469 பயனாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 2 நாட்களில் சென்னையில் உள்ள 549 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நலப்பணியாளர்கள், ரோட்டரி சங்கங்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மூலம் விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த மாதத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவாக உள்ள இடங்களைக் கண்டறிந்து ரூ.5,44,400 அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 1,41,212 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு 9,654 புகைப்பரப்பும் இயந்திரங்களின் உதவியுடன் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையை தவிர்த்து 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் இதுநாள் வரை கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவாக உள்ள இடங்களைக் கண்டறிந்து ரூ.11.07 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் பாதிப்புகள் அறியப்பட்டுள்ள இடங்களில் மேற்படி நடவடிக்கைகள் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு குழுக்கள் அமைத்து போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்”. என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட டெங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருவரும் வெளியிட்டனர்.

இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு செயலாளர் பீலா ராஜேஷ் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையாளர் (பொ) பாஸ்கரன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் .மகேஸ்வரன் , இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர் (வ (ம) நி) லலிதா, மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x