

சென்னை,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வரும் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வடமாநிலங்களிலும், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனிடையை சென்னையை குளிர்விக்கும் விதமாக கடந்த சில நாட்களாக மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் நகரின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த காலகட்டத்தில் சென்னையின் சராசரி அளவை விட இது அதிகம் ஆகும்.
இதனால் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் 4 அடிவரை உயர்ந்ததாக சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென் மேற்கு பருவமழை குறித்தும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இந்து தமிழ்திசை ஆன்-லைனுக்கு அளித்த பேட்டி:
“தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வடமாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் பெய்துவருகிறது. மும்பையில் கொட்டித் தீர்த்துவரும் கனழை ஞாயிற்றுக்கிழமைவரை பெய்யக்கூடும். அதன்பின் படிப்படியாகக்குறையும். தென் மேற்கு பருவமழை, அடுத்த மாதம் 10-ம் தேதிவரை இருக்கலாம் என்பதால், மழைக்கு இந்த ஆண்டு பஞ்சமிருக்காது.
தென் மேற்கு பருவமழையால் கேரளா, கர்நாடக மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
9-ம் தேதியில் இருந்து கேரளா முழுமையும், தமிழகத்தின் நீலகிரி, வால்பாறை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை வரை பெய்யும் இந்த மழையால் அச்சப்படும் அளவுக்கு பெரிதாக மழை இருக்காது.
அதேசமயம் தேவைக்கு தகுந்த மழை இருக்கும். கர்நாடகத்தின் தென்பகுதியைக் காட்டிலும் வடபகுதியில் மழை தீவிரமாக இருக்கும்.
கர்நாடகத்தின் குடகு, சிக்மகளூரு, தலைக்காவிரி ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளது. இந்த பகுதிகளில் 326 மிமீ மழை பதிவாகியுள்ளது. நாலடிபகுதியில் 265 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்தப் பகுதிகளில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சில நேரங்களில் திங்கட்கிழமைவரைகூட மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
கிருஷ்ணா நதிபடுகையில் மீண்டும் மழை தொடங்க இருக்கிறது, இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
சென்னைக்கு எப்போது மழை?
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மழை பெய்தாலும் அது பரவலாக இல்லை. மழை பெய்தாலும் 30 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. வரும் 9-ம் தேதி முதல் வெப்பச் சலனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வடதமிழகம், மத்திய தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
நிலத்தடி நீர் உயர் இந்த மழை உதவுமா?
இந்த மழையை மக்கள் பயன்படுதிக்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு முறையை சரியாக வீடுகளில் செயல்படுத்தினால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும், நிலத்தடி நீர் மட்டமும் நன்றாக உயரக்கூடும். வரும் 17-ம் தேதிக்குப்பின்பும் நல்லமழைக்காலம் காத்திருக்கிறது ஆதலால், இப்போதுவரை மழைநீர் சேகரிப்பு திட்டம் வீடுகளில் இல்லாதவர்கள் கூட இனிமேல் அமைத்துக்கொள்ளலாம்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
அக்டோபர் மாதத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் வடகிழக்கு பருவமழையும் நன்றாக தமிழகத்துக்குஇருக்கும் என நம்புகிறேன். ஆனால், அந்த மழை எப்படி பெய்யும், எவ்வளவு பெய்யும் என இப்போதே தெரிவிப்பது என்பது இயலாது. ஆதலால் அடுத்துவரும் மழை காலத்தை பயன்படுத்தி வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகளை மக்கள் செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம்.
இவ்வாறு பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்..
பேட்டி : போத்திராஜ்