

மதுரை,
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் ரேஷன் அட்டைகளை நம்பி வாழும் குடும்பங்கள் இருக்கின்றன.
இது கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாடு. அதனால் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். பண்டிகை காலங்களில் மாநில அரசு பல சலுகைகளை அறிவிக்கிறது. விலையில்லா அரிசித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
இதற்கெல்லாம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தை காங்கிரஸுடம் கூட்டணியில் இருந்தபோது திமுகவும் ஆதரித்தது. இப்போது என்னவோ இரட்டை வேடம் போடுகிறார்கள்" என்றார்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுகதான் ஆட்சி செய்யும் என்று ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, "அது அவருடைய ஆசை. ஆனால் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்" என்றார்.
மேலும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பயணம் வெற்றுப் பயணமாக இருந்துவிடக் கூடாது. அதன்மூலம் உண்மையிலேயே தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் கிடைத்தால் அதனைப் பாராட்டலாம் என்றும் கூறினார்.