தமிழ் தெரியாத இந்தி தெரிந்த உயர் அதிகாரிகளால் நிர்வாக சிக்கல்: சட்டப்பேரவையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்
முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி

புதுச்சேரியில் உயரதிகாரிகளாக தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகளை மட்டுமே மத்திய அரசு நியமித்து வருவதால் நிர்வாக சிக்கல் ஏற்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர்கள் பலரும் இன்று (செப்.6) கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

"மொஹரம் பண்டிகைக்கு அரசு விடுமுறை தினத்தை வரும் 10-க்கு பதிலாக வருகின்ற 11-ம் தேதி அறிவிக்கப்படும்.

'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதால் இத்திட்ட சாதக பாதங்களை பார்த்து சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தான் இதுதொடர்பாக முடிவு செய்யப்படும்.

புதிய வாகன திருத்த சட்டம் தொடர்பாக மக்களிடையே முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தமிழில் பேசும் சூழலில் அதை அதிகாரிகள் அறிந்து புரிந்துகொள்கிறார்களா என்று அரசு கொறடா அனந்தராமன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் உள்ள உயரதிகாரிகளாக தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வரும் நிலையில் அதிகளவில் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகளை மட்டுமே நியமித்து வருகின்றது. இதனால் நிர்வாக சிக்கல் ஏற்படுகின்றது. ஆகவே தமிழ் தெரிந்த அதிகாரிகளை அதிகப்படியாக நியமிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்," என்றார்.

புதுச்சேரியில் அரசின் கொள்கை திட்டமான இலவச அரிசி தொடர்ந்து வழங்குவது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால் சில காரணங்களால் அவை தடைபடுகின்றது. ஆகவே பொதுமக்களின் விருப்பத்திற்கேற்றவாறு தொடர்ந்து மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் முன்மொழிந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

செ.ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in