

மதுரை,
இளம் வயதில் விளையாட்டில் ஆர்வத்தோடு ஈடுபட்டதால்தான் இன்றும் நான் துடிப்போடு செயல்படுகிறேன் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் 11வது ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. இந்த போட்டியில், 225 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 8 பிரிவுகள் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றிப்பெற்றவர்களுக்கு தனி நபர் சாம்பியன் பட்டம், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வழங்கப்பட்டது.
போட்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் என்.கண்ணன் துணைத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலைராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "இளைஞர்களே இந்நாட்டின் மதிப்பு மிக்க செல்வம். அவர்களே தேசத்தின் விலைமதிப்பற்ற சொத்து. வெற்றியாளர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள். இந்தியாவிலேயே அதிக இளைஞர்களை கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
உடற்கல்வி என்பது தனிப்பட்ட ஆளுமை.
நாட்டிலேயே தமிழகம் விளையாட்டில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு பெருக்கிக் கொண்டே இருக்கிறது.
இளம் வயதில் விளையாட்டில் ஆர்வத்தோடு ஈடுபட்டதால்தான் இன்றும் நான் துடிப்போடு செயல்படுகிறேன். சிறுவயதில் விளையாட்டில் ஆர்வமோடு இருந்தால் எப்போதும் துடிப்போடு செயல்படலாம் என்பதற்கான உதாரணம் நான்தான். உடல் அளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் நான் சீராக இருப்பதற்கு விளையாட்டே முக்கிய காரணம்.
விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்த ஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்களுக்கு 2 கோடி ரூபாய் வழங்கி வருகிறோம். அதேவேளையில் பண்டை கால விளையாட்டுக்கள் மறைந்து போகக் கூடாது என்பதற்காக மாவட்ட ஒன்றிய அளவுகளிலும் மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இருப்பதிலேயே சிறந்த விளையாட்டுப் போட்டி நீச்சல் போட்டிதான்.
இதுவரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக் அரசு சார்பில் ரூ. 5கோடியே 63லட்சத்து 33 ஆயிரம் வரை பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 10% சீருடை பணியாளர் தேர்விலும், வனம் சார்ந்த தேர்வுகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு இடஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.