முதலில் படிப்பு, பிறகு திருமணம்: 18 வயது பெண்ணுக்கு நீதிமன்றம் அறிவுரை

முதலில் படிப்பு, பிறகு திருமணம்: 18 வயது பெண்ணுக்கு நீதிமன்றம் அறிவுரை
Updated on
1 min read

மதுரை 

முதலில் படிப்பு, பிறகுதான் திருமணம் என ஆட்கொணர்வு வழக்கில் 18 வயது பெண்ணுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை கூறினர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த குமார், தனது 18 வயது மகளை மீட்டு ஒப்படைக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரரின் மகளை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

குமார் தரப்பில், தனது மகள் தற்போதுதான் 18 வயதை அடைந்துள்ளார். அவர் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும். அதுவரை அவரது திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரரின் மகளிடம் நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண், நான் எனக்கு பிடித்தவரை உண்மையாக காதலிக்கிறேன். படிப்பைத் தொடர விரும்புகிறேன். ஆனால், தந்தையுடன் செல்ல விருப்பமில்லை என்றார்.

பின்னர் காதலன் ஆஜராகி, ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறேன். மனுதாரரின் மகளைக் காதலித்து வருகிறேன். அவரைத் திருமணம் செய்துகொள்ள எனது பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர் விடுதியில் தங்கி படிப்பைத் தொடரலாம். இரு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்கிறோம் என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகள் 18 வயது நிரம்பியவர். இதனால் அவரது விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. அவர் காதலிக்கும் இளைஞருக்கு 19 வயது தான் ஆகிறது. சட்டப்படி ஆணின் திருமண வயது 21 ஆகும். இதனால் அவர் 21 வயது பூர்த்தியடைந்த பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும்.

இதனால், மனுதாரரின் மகள் 2 ஆண்டுகள் விடுதியில் தங்கி படிப்பை முடிக்கலாம். பின்னர் திருமணம் குறித்து இருவரும் முடிவெடுக்கலாம். மனுதாரர் விரும்பினால் காதலனின் பெற்றோரு டன் பேசி திருமணம் குறித்து முடிவெடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in