

டிக்கெட் எடுக்காமல் அரசு பேருந்தில் வாக்குவாதம் செய்து நடத்துனரின் மரணத்திற்கு காரணமான காவலர் மீது எடுத்த நடவடிக்கை குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் திருச்சியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் காவலர் பழனிவேல் என்பவர் விருத்தாசலத்தில் ஏறியுள்ளார். அப்போது அப்பேருந்தின் நடத்துநர் கோபிநாத், காவலர் பழனிவேலிடம் பயணச்சீட்டு எடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் தான் காவலர் என்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
காவலர் உடையில் இல்லாமல், சாதாரண உடையில் பயணித்ததால், நடத்துனர் அவரின் ஐடி கார்டை காண்பிக்க கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த காவலர், சுமார் 20 நிமிடங்களாக ஐடி கார்டை காண்பிக்காமல் நடத்துனருடன் வாக்கு வாதம் செய்துள்ளார். இதன் காரணமாக நடத்துனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், காவலர் பழனிவேல் மீது காவல் துறை இது வரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்கவும்,
உயிரிழந்த நடத்துனரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு விரைவு பேருந்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குனர் எடுத்த நடவடிக்கை குறித்தும் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.