Published : 05 Sep 2019 06:15 PM
Last Updated : 05 Sep 2019 06:15 PM

மோட்டார் வாகன சட்டம்: சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தஸ்து அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம்: அரசாணை வெளியீடு

மோட்டார் வாகனச்சட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும்வாகனங்களை சோதனையிடவும், அபராதம் விதிக்கவும் மாநிலம் முழுதும் சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தஸ்த்தில் உள்ளவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்பதால், அதை முழுமையாக அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸார் விதிகளை மீறினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுதும் ஹெல்மட் அணியாமல் சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் உயர் நீதிமன்றம் தகவல் கேட்டது. ஹெல்மட் அணியாதவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மோட்டார் வாகனச்சட்டப்படி சென்னை உள்ளிட்ட காவல் ஆணையரகங்களில் உதவி ஆய்வாளர் தகுதிக்கு மேற்பட்ட சட்டம் ஒழுங்கு போலீஸார் மற்றும் போக்குவரத்து போலீஸார் வாகனங்களை சோதனையிட்டு, அபராதம் விதிக்க தகுதியானவர்கள்.

இது தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் ஆய்வாளர் அந்தஸ்த்துக்கு குறையாத சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மற்றும் அபராதம் விதிக்க தகுதியானவர்கள் என இருந்தது.
இதேப்போன்ற நடைமுறை போக்குவரத்துத்துறை வாகன ஆய்வாளர்களில் ஆய்வாளர் அந்தஸ்த்துக்கு கீழ் உள்ள அதிகாரிகள் சோதனையிட்டு அபராதம் விதிக்கக்கூடாது என்றிருந்தது.

இந்நிலையில் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த மாநிலம் முழுதும் விரைந்து அமல்படுத்த மாநிலம் முழுதும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸாரில் சிறப்பு உதவியாளர் அந்தஸ்த்து அதிகாரிகள் சோதனை மற்றும் அபராதம் விதிக்கலாம் என உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் மாநிலம் முழுதும் மோட்டார் வாகன சட்டங்களை அமல்படுத்த போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை ஆய்வு செய்யவும், அபராதம் விதிக்கவும் சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தஸ்த்து அதிகாரிகள் அளவில் அதிகாரமளித்து அரசாணை வெளியிடப்படுகிறது.

போக்குவரத்துத்துறை சோதனைச் சாவடிகளிலும் மோட்டார் வாகன ஆய்வாளர்களில் கிரேட் -2 அளவிலான அதிகாரிகள் சோதனியிடவும், அபராதம் விதிக்கவும் அதிகாரமளிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x