Published : 05 Sep 2019 05:43 PM
Last Updated : 05 Sep 2019 05:43 PM

ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் மிளிரும் மலையடிவார அரசுப்பள்ளி: தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அதிநவீன வசதிகள்

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் மலை கிராம குழந்தைகளுக்கு ஹைடெக் கல்வி வாய்ப்பு கிடைத்து வருகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள அஜ்ஜம்பட்டி மலை கிராமத்தில் 250-க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். சேர்வராயன் மலையின் வடக்குப் பகுதி அடிவாரத்தில் இந்த கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 94 குழந்தைகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் 7 ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளில் பெரும்பகுதியினர் பழங்குடியினத்தவர்கள் தான். இப்பள்ளியின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும், இங்கு பயிலும் குழந்தைகள் மத்தியில் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இங்குள்ள ஆசிரியர்கள் திட்டமிட்டனர்.

அரசுப்பள்ளி

ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் இப்பள்ளி அதிநவீன வசதிகளுடன் கூடிய ஹைடெக் பள்ளியாக தற்போது மாறியுள்ளது. டிஜிட்டல் யுகமான இன்று டிஜிட்டல் வடிவில் பாடங்களை கற்க குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதை கருத்தில் கொண்டு டிவி, செல்போன் ஆகியவற்றின் உதவியுடன் பாடம் கற்பிக்க தேவையான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். இதற்காக ஸ்மார்ட் டிவி, புரொஜெக்டர், செல்போன் ஆகியவை சுமார் 1 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களுக்கு அதி விரைவு குறியீடுகள் உருவாக்கப்பட்டு செல்போன் உதவியுடன் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் நாளில் கூட செல்போன், கணினி போன்றவற்றை இயக்கி இங்குள்ள குழந்தைகள் பாடங்களை தாங்களாகவே படிக்கின்றனர். இப்பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் செல்போன், கணினி போன்றவற்றை கையாளும் விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சிக்கு பலனாக, சுற்றுவட்டாரத்தில் தனியார் பள்ளிகளுக்கு சென்ற குழந்தைகளில் சிலரும் தற்போது இப்பள்ளியில் பெற்றோர்களால் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்பு வேறு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளின் திறன் அப்பள்ளிகளில் வெகுவாக பாரட்டை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

புரொஜெக்டர் மூலம் பாடம் எடுக்கும் ஆசிரியர்

பள்ளி தலைமை ஆசிரியர் ராமு இதுகுறித்து கூறும்போது, "குழந்தைகளுக்கு போதிக்கும் பணி என்பது பெரும் மனநிறைவை அளிக்கும் பணி. இந்தப் பணியை காலத்துக்கு ஏற்ற வகையில் நவீனமயமாக்கி எங்கள் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம். தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவுக்கு எங்கள் பள்ளிக் குழந்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். டிஜிட்டல் யுக கல்வி முறைக்கு மாறிவிட்ட போதிலும், நீதி போதனை கல்விக்கும் மிக முக்கியத்துவம் அளிக்கிறோம். குழந்தைகளிடம் பல்வேறு திறன்கள் அதிகரித்தாலும் நீதி என்ற இழை அவர்களின் மனதில் ஆழமாக பதிவாக வேண்டும். இல்லாவிட்டால் தொழில்நுட்ப அறிவு சில நேரங்களில் சமூகத்தின் மீது கூரிய கத்தியாக பாய்ந்து விடும். அதற்கு இடமளிக்காத வகையில் நீதி சார்ந்த கருத்துக்களை உள்வாங்கச் செய்து எங்கள் பள்ளிக் குழந்தைகளை உருவாக்கி வருகிறோம்," என்றார்.

செயல்முறை மூலம் பாடம் எடுக்கும் ஆசிரியர்

அஜ்ஜம்பட்டி பள்ளியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி தரமான கல்வியை வழங்கி வரும் ஆசிரியர் குழுவினருக்கு, நேற்றே மலர்களை கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துகளை பரிமாறி நெகிழ வைத்திருக்கிறார்கள் இப்பள்ளி மாணவ, மாணவியர்.

எஸ்.ராஜாசெல்லம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x