Published : 05 Sep 2019 05:22 PM
Last Updated : 05 Sep 2019 05:22 PM

ஸ்டாலின் பற்றிய கருத்து; அரசியல் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம்

திருப்பூர்

ஸ்டாலினை பற்றி தெரிவித்த கருத்துக்களில் அரசியல் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான, வெள்ளகோவில் சாமிநாதன் திமுகவின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராவார். அவரின் இல்லத் திருமண விழா இன்று (செப்.5) திருப்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருமண விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், "கருணாநிதிக்குப் பிறகு யார் என்று வருகிறபோது, மு.க.ஸ்டாலின், தளபதியாக மட்டுமல்லாமல், எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் திகழ்கிறார். நாங்கள் இன்னும் கருணாநிதி போல அதிகம் உழைக்க வேண்டும் என்பதைத்தான் இதிலிருந்து நான் எடுத்துக்கொள்கிறேன்" என கூறியிருந்தார்.

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, சமீபத்தில் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர், மு.க.ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் அவரை 'வெற்றித் தளபதி' என பாராட்டியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். திருப்பூரில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''ஸ்டாலின் கருணாநிதிக்குப் பின்பாக திமுகவின் தலைமையை ஏற்று, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். அதில் அவர் பெற்ற பெரு வெற்றியைக் கோடிட்டுக் காட்டினேன். அவ்வளவுதான்.

அவரும் தன்னுடைய பதிலுரையில், நீங்கள் வீழ்த்தப்படவில்லை; தோற்கடிக்கப்பட்டுதான் இருக்கிறீர்கள் என்ற உண்மையை மிகுந்த மெருகோடு சொல்லியிருந்தார். இவையெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பொது வாழ்விலே இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வார்த்தை நடைமுறைகளாகத்தான் பார்க்கிறேன்.

இளைய தலைமுறையின் புனிதமான, முக்கிய நிகழ்வில் வெற்றிக்கரங்களால் மங்கல நாண் எடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கோடிட்டுப் பேசினேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நாங்கள் தோற்றதும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதும் உண்மைதான், இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இதில் அரசியல் இல்லை. அரசியல் நாகரிகம் மட்டுமே இருந்தது'' என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x