கோவை அருகே விநாயகர் சிலையைக் கரைக்கும் போது விபரீதம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்களைத் தேடும் பணி தீவிரம் 

உறவினர்கள் சாலை மறியல்
உறவினர்கள் சாலை மறியல்
Updated on
1 min read

கோவை

கோவை அருகே விநாயகர் சிலையைக் கரைக்கும் போது, நொய்யல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஆலாந்துறையை அடுத்து போளுவாம்பட்டி அருகே விராலியூரில் பொதுமக்கள் சார்பில் 4 அடி உயரத்துக்கு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சிலையை, அப்பகுதி பொதுமக்கள் நேற்று (செப்.4) மாலை இக்கரை போளுவாம்பட்டியில் உள்ள நொய்யல் ஆற்றுக்கு எடுத்துச் சென்றனர். ஆற்றில் 15 அடி உயரத்துக்கு நீர் சென்றது. நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், கயிறு கட்டி சிலையைக் கரைக்க சிலரை மட்டும் காவல்துறையினர் அனுமதித்தனர்.

அப்போது, சிலையைக் கரைக்கச் சென்ற விராலியூரைச் சேர்ந்த ராமு (21) , நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது அண்ணன் மணிகண்டனும் (24) நீரில் அடித்துச் செல்லப்பட்டார். ஆலாந்துறை காவல்துறையினர் மற்றும் கோவை தெற்கு தீயணைப்புத் துறையினர் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் நேற்று இரவு முதல் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல நீரின் வேகம் அதிக அளவில் இருந்ததால், இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரான ராமு

இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியை இன்றும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இக்கரை போளுவாம்பட்டி நொய்யல் ஆற்றில் இருந்து சித்திரைச்சாவடி தடுப்பணை வரை தேடி வருகின்றனர். இதற்கிடையே, நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பேரையும் விரைவாக மீட்க வேண்டும். மீட்புப் பணிக்கு கூடுதல் ஆட்களை நியமித்து தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ராமு, மணிகண்டனின் உறவினர்கள், ஊர் மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சிறுவாணி சாலை, ஆலாந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹைஸ்கூல் புதூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரூர் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் ஆலாந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் மறியலைக் கைவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in